ஜெனிவாவின் புதிய பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கும்: அங்கு செல்லும் குழுவின் கடிவாளம் மைத்திரியிடம்

“ஐ.நா மனித உரிமைகள் சபையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு இலங்கை அனுசரணை வழங்கும். அத்துடன் மனித உரிமைகள் சபையில் வெளிவிவகார அமைச்சர் முன்வைக்கும் உரையை ஜனாதிபதியின் பிரதிநிதி சரத் அமுனுகம வரைவார். அந்த உரை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்புதல் பெறப்பட்டே சபையில் சமர்ப்பிக்கப்படும்”

இவ்வாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க நாடாளுமன்றில் இன்று அறிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையில் அரச தரப்புக் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளார்.

எனினும், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள கலாநிதி சரத் அமுனுகமவும் அரசதரப்புக் குழுவில் இடம்பெறுவார். அவர் ஜனாதிபதியின் சிறப்புப் பிரதிநிதியாக செல்கிறார். இந்தக் குழுவில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனும் இடம்பெற்றுள்ளார்.

அதிகாரபூர்வமான குழுவை ஜெனிவாவுக்கு அனுப்புவதில்லை என்றும், அங்குள்ள இலங்கைத் தூதரகமே அரசின் நிலைப்பாட்டை ஐ.நா மனித உரிமைகள் சபையில் வெளிப்படுத்தும் என்றும், முன்னதாக அரசு முடிவெடுத்திருந்த நிலையிலேயே, ஜனாதிபதி தமது தரப்பில் குழுவொன்றை அனுப்ப திட்டமிட்டிருந்தார்.

ஆரம்பத்தில் இந்தக் குழுவில் எனது பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரே குழுவை அனுப்புவது முக்கியமானது என்று ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டி அந்தக் குழுவில் இருந்து நான் விலகிக் கொண்டேன்.

பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது.

மார்ச் 21ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஐ.நா மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உரையாற்றுவார்.

அந்த உரையின் உள்ளடக்கங்களை ஜனாதிபதியின் பிரதிநிதியான சரத் அமுனுகம வரைந்து கொடுப்பார்.

வெளிவிவகார அமைச்சரின் உரை, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒப்புதலுக்காக காண்பிக்கப்படும். ஜனாதிபதியை ஒதுக்கி வைத்து நீங்கள் அதனைச் செய்ய முடியாது – என்றார்.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக,  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.

ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக,  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இந்தக் குழுவில், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் நெரின் புள்ளே ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

இந்தக் குழுவினர், ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி அசீஸ் மற்றும் பிரதி வதிவிடப் பிரதிநிதி சமந்த ஜெயசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளனர்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!