சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை: படையினர் மீதான வழக்கில் யாழ்.நீதிமன்றின் முக்கிய கட்டளை ஏப்ரலில்

சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினர் ஐவருக்கும் எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதா? அல்லது போதிய ஆதாரங்கள் இல்லாமையால் சந்தேகநபர்கள் விடுவிப்பதா? என்ற முக்கிய கட்டளையை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வரும் ஏப்ரல் 22ஆம் வழங்கவுள்ளது.

சுருக்கமுறையற்ற விசாரணையில் அரச தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்த்தாக வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி மன்றில் சமர்ப்பணம் செய்த்தையடுத்தே யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கட்டளைக்கான திகதியை நிர்ணயித்தார்.

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரின் வழக்கு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வந்தது.

இதன்போது மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகினர். வழக்கின் 3ஆவது சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் உயிரிழந்துவிட்டார்.வழக்குத் தொடுனர் தரப்பில் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி  முன்னிலையானார்.

இராணுவத்தினர் சார்பில் சட்டத்தரணிகள் இருவர் முன்னிலையாகினர்.

மன்றில் கடந்த தவணைகளில் சாட்சிகள் 1,2,3,4,5.,6 என ஒழுங்கமைக்கப்பட்டு சாட்சியங்கள் பெறப்பட்டன. பொலிஸ் சாட்சியம் முற்படுத்தப்பட்டு மன்றுக்கு சமர்பிக்கப்பட்டது. அத்துடன், வழக்குத் தொடுனர் சாட்சியங்கள் நிறைவடைந்ததாக அரச சட்டவாதி மன்றுரைத்தார்.

எதிரிகளிடம் கூண்டுச் சாட்சியம் மன்றினால் கோரப்பட்டது. ஐவரில் ஒருவர், “இந்த வழக்குடன் எனக்குத் தொடர்பில்லை. இந்த மன்றில் இதுவரை காலம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று மன்றுரைத்தார். ஏனைய நால்வரும் ஆட்சேபனையை முன்வைக்கவில்லை.

அதனால் இந்த வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணை முடிவடைந்ததால் அதன் மீதான கட்டளையை வரும் ஏப்ரல் 22ஆம் திகதி வழங்குவதாக மன்று அறிவித்து வழக்கை அன்றைய தினம்வரை ஒத்திவைத்தது.

பின்னணி

1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்தனர்.எனினும் 1998 ஆம் ஆண்டு நீதிவான் நீதிமன்றம் குறித்த நபர்களுக்கு பிணை வழங்கியது.இதனைத்தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட வழக்கு 2016ஆம் சட்டமா அதிபரால் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் போரில் உயிரிழந்தனர். இந்த நிலையில் 14 இராணுவத்தினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.எனினும் அவர்களில் 9 பேரை வழக்கிலிருந்து விடுவிக்க சட்ட மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கினார்.

ஏனைய 5 சந்தேகநபர்களுக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.இந்தச் சம்பவம் தொடர்பில் 1997ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டிருந்த இராணுவப் பொலிஸார், கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் சங்கிலி மற்றும் கைக்கடிகாரம் என்பவற்றை முகாமுக்குள் இருந்து மீட்டிருந்தனர்.

இதேவேளை, இந்த வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணையின் போது, “சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன். எனினும் இளைஞர்கள் இருவரும் வெளியே வரவில்லை” என்று  பெண் ஒருவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம்  சாட்சியமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!