அங்கஜனின் சண்டிலிப்பாய் அலுவலக பதாகைக்கு தீவைப்பு – சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலக பதாகைக்கு தீ வைத்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுழிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இன்று கைது செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலகத்தின் முன் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு தீவைக்கப்பட்டது. எனினும் பகுதியளவில் மட்டும் பதாகை சேதமடைந்தது.
இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலக, சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவரை இன்று கைது செய்தார்.

சந்தேக நபர் வேலைவாய்ப்புப் பெற்றுத்தரவில்லை என்ற விரக்தியில் அலுவலகப் பதாகைக்கு தீவைத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இந்தச் செயல் அமைந்ததால் சந்தேக நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.