அடுத்த வாரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் எவ்வாறு? – கல்வி அமைச்சின் தீர்மானம் வெளியீடு

ஜூன் 20ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதிவரை வாரத்தில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நடத்துதல் தொடர்பில் கல்வி அமைச்சினால் சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுடன் இன்று சனிக்கிழமை நடைபெற்ற இணையத்தள தொழில்நுட்ப கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஜூன் 20ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜூன் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வலய மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகள்   இந்த தீர்மானங்களை மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளப்பட்டன.

1. போக்குவரத்து சிரமங்கள் மாணவர் ஆசிரியர்களையும் அதிபர்களையும் பாதிக்காத நிலமைகளின் கீழ் பிரதேச மட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் பராமரிப்பதற்கும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

2. மேலும், ஒரு பாடசாலைக்குச் செல்ல முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அந்த நிலையிலும் பாடசாலையை பராமரிக்க முடியுமானால், வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

3. பாடசாலை இயங்கி வந்தாலும் ஒரு குழுவில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனால், அந்த மாணவர்களுக்கு இணையவழி மூலம் கற்பிக்கும் வசதிகள் இருந்தால் அந்த முறையைப் பயன்படுத்த முடியும்.

4. மேல் மாகாணத்தின் கொழும்பு பிராந்தியத்திலும் அதனை அண்டிய நகரங்களிலும் ஏனைய மாகாணங்களின் முக்கிய நகரங்களிலும் அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டதுடன், மேல் மாகாணத்தில் உள்ளவை உட்பட முக்கிய நகரங்கள் அல்லாத  பொறுத்தவரை அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

5. வார நாள்களில் இணைவழி கற்பித்தலை எளிதாக்கும் வகையில் காலை 08.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என பொதுப் பயன்பாட்டு ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்னார்வப் பணியை கல்வி அமைச்சு பாராட்டுவதுடன், மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை ஜூன் 25ஆம் திகதியன்று மாகாணக் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி இந்த வாரத்தில் இடம்பெறும் செயற்பாடுகளை மீளாய்வு செய்து ஜூன் 27ஆம் திகதி ஆரம்பமான வாரம் தொடர்பான தீர்மானம் வெளியிடப்படும் – என்றுள்ளது.