அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு – நேரலையைப் பார்வையிடலாம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது.

அதன் நேரலையை பார்வையிடலாம்;

தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம், தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) அதிகமான நுழைவிசைவு (விசா) வழங்கல், 100 நாள்கள் கட்டாய முகக்கவசம் உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் அமெரிக்க ஜனாதிபதியாகிய சில மணி நேரங்களில் ஜோ பைடன் கையொப்பம் இட உள்ளார்.

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன், இன்று புதன்கிழமை பதவி ஏற்க உள்ளார். அவர் பதவி ஏற்ற சில மணி நேரங்களில் 15 முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் முக்கியமானது சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவுக்குள் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டவரைவு, கிரீன் கார்ட் வழங்குதல் போன்றவையாகும்.

இந்த சட்டவரைவில் கையொப்பமிட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டால் கடந்த 8 ஆண்டுகளாகக் குடியுரிமை இல்லாமல் இருக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு மிகப்பெரிய நிம்மதி கிடைக்கும்.

வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு அமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் ஜென் சகி தெரிவித்ததாவது:

ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட உள்ளார்.

குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் வருவதற்கான தடையை விலக்குதல், பருவநிலை மாறுபாட்டு உடன்பாட்டில் மீண்டும் இணைதல், கோரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் அடுத்த 100 நாள்களுக்கு மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், மக்களுக்குப் பொருளாதார உதவி, ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் தவறாக எடுக்கப்பட்ட முடிவுகளைத் திரும்பப் பெறுதல் போன்றவை அந்த உத்தரவுகளில் உள்ளன.

இதன் மூலம் அமெரிக்கா முன்னோக்கி நகரும், அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம்.

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா ட்ரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது. நிதியுதவியையும் நிறுத்தியது. அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைந்து நிதியுதவி வழங்கும். உலக சுகாதாரக் கூட்டத்திலும் அமெரிக்கா வருங்காலத்தில் பங்கேற்கும்.

பரீஸ் பருவநிலை மாறுபாட்டு உடன்பாட்டில் அமெரிக்கா ட்ரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது. அந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்படும். புதிய வேலைவாய்புகள், பருவநிலை மாற்றச் சிக்கல்களைத் தீர்க்கும் நடவடிக்கைகள் போன்றவை எடுக்கப்படும்.

கறுப்பினத்தவர்கள், லாட்னோ, பூர்வீக அமெரிக்கர்கள், ஆசிய அமெரிக்கர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எல்ஜிபிடி பிரிவினர், மதச்சிறுபான்மையினர் ஆகியோர் அனைவரையும் சமமாக நடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் அகதிகள் நுழையாத வகையில் ட்ரம்ப் ஆட்சியில் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுதவி உடனடியாக ரத்து செய்யப்படும் – என்றார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!