அரசியல் இல்லாமல் இன உரிமைப் போராட்டம் இல்லை!

யாழவன்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டம் என்பது சமூக விடுதலை போராட்டமோ அல்லது மதவுரிமை போராட்டமோ அல்ல. இது இனவுரிமை போராட்டம் .

இனத்தின் மரபுரிமை காக்கப்பட வேண்டும் , தொடர்ந்து நடக்கும் இன அழிப்பு நிறுத்தப்படவேண்டும் , காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்கிற பல முக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கிய போராட்டம்.

இந்த போராட்டத்தை உண்மையில் முன்னின்று நடத்தியிருக்க வேண்டியது அரசியல் கட்சிகளே. ஆனால் தமிழ் தேசிய அரசியலில் ஒரு அரசியல் கட்சி ஏற்பாடு செய்தால் அதனை மற்றைய அரசியல் கட்சிகள் ஏற்று கொண்டு பின்னே திரள கூடிய கள நிலமை இல்லை. என்னதான் மக்களுக்கான போராட்டம் என்றாலும் ஒரு கட்சி மட்டும் முன்னிலைப்படுத்தபடுத்தப்டுகிற நிலமையை மற்றைய கட்சிகள் விரும்பமாட்டா.

இந்த யதார்த்த கள நிலையைக் கருத்தில் கொண்டே சிவில் சமூகங்களின் அமைப்பு இந்த போராட்டத்தை முன்னெடுத்தது . உண்மையில் இதை சிவில் சமூகங்களின் அமைப்பு முன்னெடுத்தது என்று சொல்வதை விட, அந்த அமைப்பிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது என்பதே பொருத்தமானது ஆகும்.

ஏனெனில் சிவில் சமூகங்களின் அமைப்பு எத்தகையது, அதன் கொள்ளளவு எவ்வளவு , அதன் கடந்த கால செயல்பாடுகள் எப்படிப்பட்டவை என்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வந்தவர்களுக்கு “இவ்வளவு பெரிய போராட்டத்தை ” ஒழுங்கமைத்து , கொண்டு நடத்தும் சக்தி அவர்களிடம் இல்லை என்பது தெட்ட தெளிவாகப் புரியும்.

அப்போ இது எப்படி சாத்தியமானது ? அரசியல் கட்சிகள் தங்கள் முழுமையான ஆதரவை கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் ஏற்பாட்டு பணிகளிலும் முன்னின்று செயல்பட்டார்கள் . இந்த போராட்டத்தை மிகப்பெரிய அரசியல் போராட்டமாக நடத்தி முடிக்க வேண்டிய கடப்பாடு அரசியல் கட்சிக்களுக்கு உண்டு . அதற்கு ஏற்ற வகையில் அவர்களும் செயல்பட்டார்கள்.

உண்மையில் “சிவில் சமூகங்களின் அமைப்பை” இதை நடத்துகிறது என்பது வெறும் பெயரளவானதே . இதை அவர்கள் புரிந்து கொண்டு , இந்த போராட்டம் ஒரு மக்கள் உரிமை போராட்டம் என்கிற இலக்கில் முடிக்க வேண்டிய சூழ்நிலைகளை அவர்கள் உருவாக்க வேண்டும்.

எவ்வளவுக்கு எவ்வளவு அரசியல்வாதிகள் உள்ளீர்க்கப்படுகிறாரார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு விரைவில் போராட்டம் குறித்த இலக்கை நோக்கி நகரும் .

அரசியல்வாதிகள் முன்னால் செல்வதனாலேயே முஸ்லீம் மக்கள் ஒன்றிணைகிறார்கள் . முஸ்லீம் மக்களை ஒன்றிணைப்பவர்கள் முஸ்லீம் அரசியல்வாதிகள்தான் . தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்திருந்தார்கள் என்கிற அடிப்படையிலும் தங்களது உறவுகளின் ஜனாஸா எரிப்புக்கான உரிமைக்காககவும் அவர்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

அரசியல்வாதிகள் முன்னே செல்லாமல் மத தலைவர்கள் மட்டுமே முன்னே சென்றால் சில வேளை இந்த நிலமை மாறலாம் . தனியே மத தலைவர்கள் போராட்டம் என்கிற தோற்றப்பாட்டை உருவாக்குவது நல்லது அல்ல .

அரசியல்வாதிகள் முன்னே செல்லும் பொழுது , அவர்களில் சிலருக்கோ , அல்லது பலருக்கோ அவர்கள் போராட்டத்தில் காட்டும் ஆர்வம் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் கூடிய ஊடக வெளிச்சம் படத்தான் செய்யும் .

போராட்டம் நடக்கும் இடங்களில் அதிக செல்வாக்கு உள்ள அரசியல்வாதிகளின் மேல் இத்தகைய ஊடக வெளிச்சம் கூடுதலாக விழுவதும் தவிர்க்க முடியாதது ஆகும் .

தமிழ் தேசிய அரசியலில் பயணிக்க கூடிய கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய முக்கிய கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் முன்னிலையில் பயணிக்கும் இந்த போராட்டம் கடந்த இரண்டு நாள்களும் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றிருந்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் கிழக்கில் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் முன்னின்று , துணிவுடன் செயல்படுகிறவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் ஆவார் . அவர் பல தடவை ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டும் இருந்தார். அந்த வகையில் கிழக்கில் இந்த போராட்டம் நடந்த இரண்டு நாட்களிலும் சாணக்கியன் மீண்டும் ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இவ்வாறு அவர் முன்னிலைப்படுத்தபடுவது இது தான் முதல் முறை இல்லை. ஆனால் அதை காரணம் காட்டி இன்று காலையில் ஆரம்பித்த ஊர்வலத்தில் சில வாத பிரதிவாதம் நடந்திருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. அதுவும் சிவில் சமூகங்களின் அமைப்பை சேர்ந்த மதகுருமாரே அந்த வாக்கு வாதத்துக்கு காரணமாக இருந்தது மிகவும் வருந்ததக்கது . இந்த ஊர்வலத்தால்தான் முதன்முறை ஊடகங்களின் வெளிச்சம் சாணக்கியன் மேல் படுகிறது என்றால் ஓரளவுக்கு அவர்கள் வாதம் ஏற்று கொள்ளலாம் .

இந்த போராட்டம் வெற்றிகரமாக முடிக்க இதே ஊக்கத்துடனான ஆதரவு எல்லோரிடமிருந்தும் தேவை. அடுத்து வரும் மாவட்டங்களில் அந்த அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னே செல்வதும் , அவர்கள் மேல் ஊடக வெளிச்சம் படுவதும் தவிர்க்க முடியாதவை ஆகும்.

அரசியல் இல்லாமல் போராட்டம் இல்லை. அரசியல் போராட்டத்தில் அரசியல்வாதிகள் முன்னிலையாவது தப்பு இல்லை. மாறாக அது போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் .