அழகான இலங்கைத் திருநாடு அறத்தை தொலைத்ததனால் அல்லல்களை அனுபவிக்கின்றது – புத்தாண்டுச் செய்தியில் கலாநிதி ஆறு.திருமுருகன் கருத்து

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

காலம் வேகமாக கடக்கிறது. உலகம் நோய்களின் சீற்றத்தால் அல்லற்படுகிறது. விஞ்ஞாத்தின் விந்தைகள் ஆச்சரியத்தை தந்த போதிலும் இயற்கையை எவராலும் வெல்லமுடியவில்லை.

இயற்கையே இறை சக்தி. இறைவனை அனைவரும் எம்மைக் காத்தருளுமாறு வழிபாடு செய்யுங்கள். இந்த இனிய பிறப்பை நல்லவண்ணம் காத்து எமக்கும், பிறர்க்கும் நன்மைகளைத் தேடுவோமாக.

முகத்தை எவ்வளவோ அலங்கரித்த மனிதன் இன்று கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு அச்சப்பட்டு முகக்கவசம் அணியும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலை மாறவேண்டும்.

உலகம் முழுவதும் நாம் நிம்மதியாக வாழும் நிலை உருவாக வேண்டும். இதற்காக இன்றைய நாளில் நன்றாக பிராத்தனை செய்வோம்.

அழகான இலங்கைத் திருநாடு அறத்தை தொலைத்ததனால் அல்லல்களை அனுபவிக்கின்றது. என்று தர்மம் பிழைக்கிறதோ அதன் பின் எல்லாம் பிழைத்துவிடும்.

இன்று எம்மண்ணில் போரில்லை. ஆனால் பொருளாதாரப் பலமிழந்துவிட்டோம். நாளை என்னவாகுமோ என்று அச்சத்தோடு அனைவரும் வாழும் நிலை. எம்மண்ணில் தர்மம் நிலைக்க வேண்டும். பஞ்சமின்றி அனைவருக்கும் உணவு கிடைக்கவேண்டும் நீதியோடு அனைவரும் நிம்மதியாக வாழவேண்டும்.

இவ்வேண்டுகோளை இந்நாளில் அனைவரும் இறைவனிடம் வேண்டுவோம். “கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்”எனக் கம்பராமாயணம் கூறியது. இன்று இலங்கை கடன் தொல்லையில் கதிகலங்கி, அண்டை நாடுகளிடம் கையேந்திக் காத்திருக்கிறது. இது நாட்டுக்கு மட்டுமல்ல நமக்கு எல்லோருக்கும் பாடமாக அமைந்துள்ளது.

நாடு நல்லாய் இருந்தால்தான் நாம் எல்லோரும் நல்லாய் இருக்கமுடியும். நாட்டுக்காக அனைவரும் பிராத்திப்போம். ஆடம்பரமான, அர்த்தமற்ற காரியங்களை நிறுத்துவோம். கடின உழைப்பினால் எம்மைநோக்கிவரும் இடர்களை வெல்வோம்.

அன்பான உறவுகளே கடந்து சென்ற ஆண்டில் நாம் விட்ட தவறுகளை நினைந்து கடவுளிடம் மன்னிப்பு கேட்போம். புதிய ஆண்டில் புதிய சிந்தனையோடு புதுமைகள் செய்ய புறப்படுவோம். காலம் மிகவும் பெறுமதியானது உயிருக்கு சமமானது.

எனவே புதிய ஆண்டில் அனைவரும் நல்ல திட்டமிடல்களோடு நல்லவண்ணம் வாழ முற்படுவோம். பிறரை குறை கூறுவதைவிடுத்து நாம் என்ன செய்தோம் என நமக்குள்ளே கேள்வி எழுப்பி சாதிக்க தயாராவோம்.

புதிய ஆண்டில் அனைவரும் சகல வளங்களோடும் சிறப்பாக வாழத் துர்க்கை அம்மனைப்பிராத்தித்து. அனைவருக்கும் நல்லாசிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

செஞ்சொற்செல்வர்.கலாநிதி ஆறுதிருமுருகன்,
தலைவர் – தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம், தவைவர் -சிவபூமி அறக்கட்டளை