அழிக்க முற்படும் ஈழ சினிமாவை ஆரோக்கியமாகப் பயணிக்க வைக்கவேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு

சினிமா என்பது ஒரு படைப்பியல் ஊடகம் ஆகும்.

ஒரு இனத்துக்கான தேவைகள், உரிமைகள், பண்பாடுகள், சமூகப் பிரச்சினைகள் என்பவற்றை சொல்ல ஒரு பத்திரிகை எப்படி உதவுகிறதோ, ஒரு தொலைக்காட்சி எப்படி அடையாளங்களை எடுத்து செல்கிறதோ, ஒரு நாவல் எப்படி இனத்தின் வலியை எடுத்து சொல்கிறதோ, அது போன்று ஏன் அதைவிட ஆழமாகவும் வேகமாகவும் கொண்டு செல்லக்கூடியது சினிமா.

அதனால்தான் எதிரிகளுடன் கடுமையாக போரிட்டு வந்த காலங்களில்கூட, சினிமா மற்றும் கலை படைப்புகளையும் ஊக்குவித்து வந்தார்கள் தமிழீழ விடுதலை புலிகள். நிதர்சனம் என்கிற ஒரு துறையை நிறுவி, அதனூடாக பல திரைப்படங்கள் எடுத்திருந்ததும், அவற்றில் பல இனத்தின் உரிமைகளை சொல்லி சென்றதையும் எவரும் மறந்துவிடவோ அல்லது மறுத்துவிடவோ முடியாது.

படைப்புகள் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பின்வருமாறு ஒரு கூற்றை கூறி இருந்தார்.

“புதுமையான புரட்சிகரமான படைப்புகளை உருவாக்க வேண்டும். எமது மொழியும் கலையும் பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எம் மண்ணில் ஆழமாய் வேரூன்றி நிற்பவை. எம் தேசிய வாழ்வுக்கு ஆதாரமாய் நிற்பவை”

ஈழத்து சினிமா என்பது தனித்துவமான அடையாளங்களை கொண்டது. காலத்துக்கு காலம் குறிப்பிட்ட பரிமாண வளர்ச்சிகளுடன் அது பயணித்து வருகிறது. போருக்கு பின்னரான காலத்தில் உள்ள சினிமாவை நாம் நோக்கினால், ஆரம்பத்தில் தட்டு தடுமாறினாலும் பின்னர் சற்று மெதுவாக நிதானமாக, ஆனால் இனத்தின் வலிகளை சொல்ல கூடியதும் மக்களின் வாழ்க்கையை சொல்ல கூடியதுமான ஆணித்தரமான படைப்புகள் சிலவற்றை வெளியிட்டு பயணிப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

அவற்றில் சில சர்வதேச ரீதியிலும் சில விருதுகளை வாங்கி சென்றிருந்தன. சர்வதேச விருது விழா வழங்கும் மேடைகளில் இனத்திற்கு ஏற்பட்ட வலிகள் சில பேசப்பட்டன.

இது இலங்கை ஆட்சியாளர்களுக்கு சிறு தலையிடியாகவே இருந்தது. இதனால் இவாறான படைப்புகளை வெளிக்கொண்டு வரும் ஈழ சினிமாவை தடுக்க வேண்டிய அல்லது அழிக்க வேண்டிய நிலைக்கு சென்றது. ஈழ சினிமா தனித்துவமான அடையாளங்களுடன் முத்திரை பதித்து விடக்கூடாது என்கிறதும் இலங்கை அரசின் நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் ஈழ சினிமா, ஊடகங்கள் போன்றவற்றின் மீது நேரடியாக அடக்குமுறையை பிரயோகிப்பதை இன்றய சூழ்நிலையில் தவிர்க்க விரும்பியது இலங்கை அரசு. ஏனெனில் ” ஊடக அடக்குமுறை, படைப்புலக அடக்குமுறை” என்கிற சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாக வேண்டி ஏற்படும். ஏற்கனவே பல மனிதவுரிமை குற்றசாட்டுகள் இலங்கை மேல் இருக்கும் நிலையில் மேலதிக அழுத்தங்கள் வருவதை தவிர்க்கவே விரும்பியது.

அதனால்தான் இன்னொரு மாற்று வழியை தேர்ந்தெடுத்தது. ” ஈழ சினிமாவை திசை மாறி பயணிக்க வைப்பது” என்கிற அந்த முறையை கையில் எடுத்தது.

ஏற்கனவே இனவுரிமை கோரும் தமிழ் மக்களில் சிலரை அபிவிருத்தி போதும் என்கிற நிலைக்கு கொண்டு வந்தது போல, தனித்துவமான படைப்புகளாக வெளிவந்து கொண்டிருந்த ஈழ சினிமாவில் இருந்த சிலரை “பஷனான படைப்புகளாக, தென்னிந்திய சினிமா மாதிரியான படைப்புகளாக” கொண்டுவருவதே தேவை என்கிற மன நிலைக்கு மாற்ற தொடங்கியது.

இதற்காக இவர்கள் ஆள்களை தேட வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. ஏற்கனவே சினிமா எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் உள்ள இளையோருக்கு, அதற்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து, அந்த திசை நோக்கி பயணிக்க வைக்க தொடங்கினார்கள்.

இதில் சிலர் இயல்பாகவே அவ்வாறான படைப்புகளால்தான் தாங்கள் வெற்றியடையலாம் என்கிற சிந்தனை வயப்பட்டு இருந்தார்கள் என்பதும் மறுப்பதற்கு இல்லை. சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு தாங்களே விளம்பரம் செய்து, தங்களை கதாநாயகர்களாகவும் கதாநாயகிகளாகவும் உணர தலைப்பட்டார்கள்.

உண்மையாகவே கலை உணர்வு கொண்டு, ஈழ சினிமாவில் தரமான படைப்புகள் வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனையுடன் சினிமாவுக்குள் உழைத்து கொண்டிருப்போரைவிட இவர்கள் வேகமாக வெளி உலகுக்கு தெரியவும் தொடங்கினார்கள்.

இவர்கள் சினிமா எடுக்கிறோம் என்று கூறி ஆங்காங்கே ஒரு பாடல், பத்து மொடல் சூட்டிங் என்று சுத்தி திரிய தொடங்கினார்கள். இவர்கள் இவ்வாறு திரிவதற்கு உரிய பணம் ஏதோ ஒரு வகையில் இவர்களுக்கு கிடைத்து கொண்டே இருந்தது அல்லது கிடைக்க வைக்கப்பட்டது.

ஏற்கனவே இப்படியானவர்கள உருவாக்கியவர்கள், அவர்களை வைத்தே அடையாளங்களை அழிக்கும் வகையில் அவர்களிடையே ஐஸ் கஞ்சா போன்ற போதை பொருள்களை புகுத்தினார்கள்.

இளையோராக இருக்க கூடிய அவர்கள் போதைக்கு அடிமையாகியதோடு மட்டும் அல்லாமல், கலாசார புரள்வு நடவடிக்கைகளுக்கும் அடிமையானார்கள்.

ஈழத்து சினிமாவோடு பயணித்த ஆள்கள் ஓன்று சேர்ந்து சங்கம் அமைக்க முற்பட்ட போதுகூட இவர்கள் பிரச்சினைகளை உருவாக்கினார்கள். மண் சார்ந்து, இனம் சார்ந்து வரும் படைப்புகளை நக்கல் நையாண்டி செய்தார்கள்.

அண்மையில் மறைந்து போன ஈழ சினிமாவின் மூத்த படைப்பாளியாக விளங்கிய கேசவராஜன்கூட இவர்கள் பற்றி விசனப்பட்டு பல கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இவ்வாறு செயல்பட்டு வந்தவர்களில் ஒரு சிலரது நடவடிக்கைகளே கடந்த சில நாள்களில் சமூக வலைத்ளங்களில் பேசுபொருளாக இருந்தது.

ஆனால் இவ்வாறு ஈழ சினிமாவை உருக்குலைக்க இறக்கப்பட்ட சிலரின் நடவடிகக்கையை வைத்து ” ஈழ சினிமா ” முழுமையையும் பிழையானதாக காட்டும் கருத்துருவாக்கங்களை சிலர் சமூக வலைத்தளங்களில் உருவாக்க முனைகிறார்கள். இது தவறானதாகும்.

தமிழர்களுக்கு அரணாக இருந்த புலிகளை அழித்த இலங்கை அதிகார பீடம், தமிழர்களின் அடையாளங்கள், பண்பாடுகள், கலை, கலாச்சாரங்களையும் அழிக்கும் போரையும் தொடங்கி உள்ளது.

இனப்படுகொலைக்கு உள்ளான இனம் ஒன்றின் எஞ்சிய மக்களுக்காக இருக்கும் அடையாளங்களையும் அழிக்கும் செயல்பாடுகளுக்கு துணைபோகாதீர்கள்.

களைகளை மட்டும் இனம் கண்டு, அவற்றை புடுங்கி, பயிர்களில் இருந்து எவ்வாறு நல்ல விளைச்சல்களை பெறுகிறோமா, அதே மாதிரி ஈழ சினிமாவில் உள்ள களைகளை மட்டும் புடுங்கி, ஈழ சினிமாவை ஆரோக்கியமாக பயணிக்க வைக்க வேண்டிய கடமை எங்கள் எல்லோருக்கும் உண்டு.

எமக்கு தேவையானது உரிமை அல்ல, அபிவிருத்தி மட்டுமே என்று கூறுகிறவர்களை எப்படி தமிழ் தேசியத்திலிருந்து தள்ளி வைத்து பார்க்கிறமோ, அதே மாதிரிதான் ஈழ சினிமாவில் உள்ள இவர்களை நாம் புறந்தள்ளி, உண்மையான உணர்வுகளோடு பயணிக்கும் ஈழ சினிமாவை அரவணைத்து – ஊக்கப்படுத்தி- உயர்த்திவிடுவோம்.

நன்றி
யாழவன்