ஆண்கள் பிரிவில் கிறாஸ் ஹோப்பர்ஸ்; பெண்கள் பிரிவில் கே.சி.சி.சி – யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்டத்தில் சம்பியன்

0

‘வானவில் – 2020’ கூடைப்பந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டியில் கிறாஸ் ஹோப்பர்ஸ் அணி சம்பியானது. இரண்டாவது இடத்தை வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி பெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கூடைப்பந்தாட்டத்தை புத்துயிர் வழங்கும் வகையில் ஸ்புட்னிக் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஆதரவுடன் கூடைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று (19) இரவு யாழ்ப்பாணம் மாவட்ட கூடுப்பந்தாட்ட சங்க ஆடுதளத்தில் இடம்பெற்றது.

இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அழைக்கப்பட்ட 5 கழகங்களுக்கு இடையிலான சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய கிறாஸ் ஹோப்பர்ஸ் அணி சம்பியனானது.

அழைக்கப்பட்ட கழகங்களுக்கு அணிகளுக்கு இடையிலான பெண்கள் கூடைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் பவிலியன் பெண்கள் அணியை எதிர்த்து ஆடிய கே.சி.சி.சி பெண்கள் அணி சம்பியனானது.

இறுதிப் போட்டியில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் பிரதேச செயலகர் சாம்பசிவம் சுதர்சனும் கெளரவ விருந்தினர்களாக வடமாகண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் பா.முகுந்தன், இலங்கை வர்த்தக வங்கியின் யாழ்ப்பாணம் கிளை முகாமையாளர் அ.ஜெயபாலன், யாழ்ப்பாணம் மாவட்ட கூடைப்பந்தாட்ட செயலகர் தி.கோசிகன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில், “நான் கூடைப்பந்தாட்ட வீரர்தான். வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையை வளர்த்தெடுக்க அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஊடாக நடவடிக்கை எடுப்பேன்” என்று தெரிவித்தார்.

அத்துடன், இறுதிப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளால் இறை பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் 1998ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவின் அனுசரனையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.