தமிழ் அரசுக் கட்சி ஆதரவாளர்கள் இடையே மீண்டும் பனிப்போர் – தலைமையிடம் மாற்றமா, தலைமை மாற்றமா?

தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவாளர்களிடையே மீண்டும் பனிப்போர் ஒன்று ஆரம்பித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது ஆரம்பித்த இந்த பனிப்போர், தேர்தல் முடிவுகளின் பின் சற்று குறைவடைந்து தற்பொழுது மீண்டும் சூடு பிடித்துள்ளது.

தனிப்பட்ட வேட்பாளர்கள் அல்லது உறுப்பினர்களை ஆதரிக்க கூடிய ஆதரவாளர்களாலேயே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன என்பது பற்றி ஏற்கனவே ஒரு பந்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

மிக நீண்ட வரலாறும், தடுமாறாத தமிழ் தேசியத்தில் தொடர்ச்சியாக பயணித்து வரும் ஒரு இனத்தை பிரதிநித்துவபடுத்துகின்ற கட்சி ஒன்றை முற்றாக அழிக்கும் நிலைக்கு இத்தகைய பனிப்போர்கள் இட்டு செல்ல கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன என்கிற அடிப்படையிலும், இத்தகைய செயல்பாடுகள் இன விடுதலைப் பாதையைக் கூட திசை மாற்றிப் பயணிக்க கூடிய ஏதுநிலைகளை உருவாக்கவல்லது என்கிறதன் அடிப்படையிலும் இந்த பிரச்சினைகளின் பின்னணி பற்றியும், அதை சரிப்படுத்த கூடிய வழிவகைகள் குறித்தும் ஆராய்கிறது இந்த பந்தி.

தமிழ் அரசுக் கட்சியின் வரலாறு ( சுருக்கம் )

1948ஆம் ஆண்டு டிசெம்பரில் இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட “இந்திய -பாகிஸ்தான் வம்சாவளி குடியுரிமை சட்டத்ததை ” ஆதரிப்பதா ? எதிர்ப்பதா? என்கிற பிரச்சினையில் இரண்டாக பிரிந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கடசியின் உறுப்பினர்களான டொக்டர் நாகநாதன், வன்னியசிங்கம் மற்றும் செல்வநாயகம் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டதே தமிழ் அரசுக் கட்சி ஆகும். 1948ஆம் ஆண்டு டிசெம்பர் 18ஆம் திகதி மருதானையில் உள்ள அரச லிகிதர் சேவை சங்க கட்டடம் ஒன்றில் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தை தலைவராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சிக்கு இதுவரை பலர் தலைவர்களாக இருந்து வந்துள்ளனர்.

” தமிழ் பேசும் தேசிய இனத்தின் சுயநிர்ணய அடிப்படையில் சுயாட்சி என்ற இலக்கை அடைவதற்கு இடையறாது உழைக்க உறுதி பூண்ட தமிழ் மக்களின் தேசிய நிறுவனமாக இயங்கும்” என்கிற தீர்மானத்தை கொண்டு அதன் வழியே இயங்கி வந்த தமிழ் அரசுக் கட்சி, 24 ஆண்டுகளின் பின்னர், தமிழ் தேசிய ஒற்றுமை கருதி, மீண்டும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலார் காங்கிரசுடன் இணைந்து தமிழர் விடுதலை கூட்டணி என்கிற புதிய கூட்டணி ஒன்றை அமைத்து செயல்பட்டு வந்தது.

தமிழர் விடுதலை கூட்டணி ஆரம்பிக்க முதல் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்களாக முறையே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் , கு.வன்னியசிங்கம் , ந.இ.இராஜவரோதயம், சி. மு.இராசமாணிக்கம், இ.மு.வி.நாகநாதன், அ.அமிர்தலிங்கம் ஆகியோர் இருந்து வந்தனர். அதன் பின்னர் சிவசிதம்பரம், சின்னத்துரை, இரா.சம்பந்தன் ஆகியோர் இருந்துள்ளனர்.

2004ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக செயல்பட்டு வந்த வீ.ஆனந்தசங்கரி, கருத்து வேறுபாட்டினால் பிரிந்து செல்ல மீண்டும் தமிழ் அரசுக் கட்சி தனித்து, ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஒரு முக்கிய பங்காளி கட்சியாக செயல்பட ஆரம்பிதது. அப்போது தலைவராக இருந்த சின்னத்துரை லண்டனில் இருந்ததால், இரா.சம்பந்தனுக்கு தலைமை மாற்றப்பட்டது .

2004 லிருந்து 2014 வரை கிட்டத்தட்ட 10 வருடமாக தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக இருந்த இரா சம்பந்தன் , தனது தலைமைப்பதவியை விட்டு விலகியதை தொடர்ந்து , தற்பொழுது தலைவராக இருக்கும் மாவை சேனாதிராசா தலைமையைப் பதவியேற்றார். இதுவே தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்களாக இருந்தவர்களின் சுருக்கமான வ்ரலாறு .

தற்போதைய பனிப்போர்

இனி தற்பொழுது ஏற்பட்டுள்ள பனிப்போர் பற்றி பார்ப்போம்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக விளங்கிய எம்.ஏ.சுமந்திரன் சிங்கள யூ ட்யூப் தளம் ஒன்றுக்கு கொடுத்த செவ்வி ஒன்று மிகப் பெரும் சர்ச்சையாகியதைத் தொடர்ந்து வெளிப்பட்ட இந்த பனிப்போரின் தொடர்ச்சிதான் இன்றும் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

2020 பொது தேர்தலில் எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக பகிரங்க வெளியில் கட்சிக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் பலர் விமர்சனம் வைத்து கொண்டிருக்க, அதை மேலும் தூபம் போட்டு தூண்டி கொண்டிருந்தது மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன், இமானுவேல் ஆனல்ட் போன்றவர்களை ஆதரிக்க கூடிய ஆதரவாளர்கள். அதற்கு எதிராக எதிர்வினையாற்றி கொண்டிருந்தவர்கள் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரை ஆதரிக்க கூடிய ஆதரவாளர்கள்.

கட்சிக்காக நின்ற ஆதரவாளர்கள் வேட்பாளர்களுக்கான தீவிர ஆதரவாளர்களாக தங்களை பகிரங்கமாக அடையாளப்படுத்தி கொண்ட சந்தர்ப்பமாக இது அமைந்திருந்தது.

தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசா தோல்வி அடைந்தார். எம்.ஏ.சுமந்திரன் வெற்றி பெற்று நாடாளுமன்றப் பிரதிநிதியாகினார்.

தேர்தலின் போது கட்சியின் உறுப்பினர்கள், சக வேட்பாளர்கள் எல்லோரும் எம்.ஏ.சுமந்திரன் மேல் விமர்சனங்கள் பகிரங்க வெளியில் வைத்த போது, அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கட்சியின் தலைவர் அதை செய்ய தவறி இருந்தார். தவிரவும் மாவை சேனாதிராசாவின் மகனான கலையமுதன் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான அணியை மறைமுகமாக ஒன்று சேர்க்கும் வேலைகளிலும் இறங்கி இருந்தார்.

தேர்தல் முடிவுகளின் போதுகூட, வேண்டும் என்றே உருவாக்கப்பட்ட சர்ச்சையை பெருப்பித்து கலவரமாக்க கூடிய நிலைக்கு கொண்டு சென்றதில் கலையமுதனின் பங்கும் இருந்தது. இதெல்லாம் தெரிந்தும் இதை ஏதும் கட்டுப்படுத்த முயலாமல், வெறுமனவே வேடிக்கை பார்த்து கொண்டிருந்து கட்சி ஒன்றின் தலைவராக அவர் செய்த மிக பெரும் தவறு.

இந்த நிலையில் வெற்றி பெற்ற எம்.ஏ.சுமந்திரன் தனக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை பகிரங்க வெளியில் முன் வைத்து, அதற்கு எதிராக நடடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார். பல தடவைகள் திரும்பத் திரும்ப வலியுறுத்தியதன் அடிப்படையில் சாட்டுக்கு ஒரு விசாரணை குழு அமைத்து ஒரு சிலர் மேல் தற்காலிக தடை என்கிற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சம நேரத்தில் எம்.ஏ.சுமந்திரனை ஆதரித்து வந்த தீவிர ஆதரவாளர்கள் கட்சியின் தலைவர் மீதும் சரவணபவன், கே வி தவராசா ஆகியோர் மீதும் பகிரங்கமாக விமர்சனங்களை முன் வைக்க தொடங்கினார்கள்.

தமிழ் அரசுக் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலூடாக நாடாளுமன்றம் போகும் வாய்ப்பு மாவை சேனாதிராசாவுக்கு இருந்தது. அதை அவர் விரும்பியுமிருந்தார். ஆனால் அம்பாறையில் தமிழ் பிரதிநித்துவம் இழந்திருந்த நிலையில் அங்கே இருந்து ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டிய கடப்பாடு கட்சிக்கு இருந்தது.

இந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் மாவை சேனாதிராசாவுடன் கதைத்துவிட்டு, பின்னர் இரா சம்பந்தனை சந்தித்து அம்பாறையிலிருந்து கலையரசனை நாடாளுமன்றம் அனுப்புவது என்று முடிவெடுத்தனர் . ஆனால் இந்த முடிவை மாவை சேனாதிராசாவின் முழுமையான சம்பந்தமில்லாமல் எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில்தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இயங்கி வந்த விஸ்வலிங்கம் மணிவண்ணன், அந்த கட்சியிலிருந்து விலக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்புரிமை தொடர்பாக தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போடப்பட்ட வழக்கினை கைவாங்கினார் எம்.ஏ.சுமந்திரன்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக இருந்த இம்மானுவேல் ஆனல்ட் சமர்ப்பித்த பாதீடு தோல்வியடைந்ததால், அவர் பதவி விலக நேரிட்டது. பின்னர் நடந்த முதல்வர் போட்டியில் மணிவண்ணன் போட்டியிட்டு முதல்வராகத் தெரிவானார். இந்த முதல்வர் போட்டியின் போதுகூட மீண்டும் இம்மானுவேல் ஆனல்ட்டை முதல்வர் போட்டிக்கு நிறுத்தியமை தொடர்பாக கட்சியின் தலைவர் கடுமையாக விமர்சிக்கட்டார்.

இம்மானுவேல் ஆனல்ட்டை பழிவாங்கும் செயல்பாட்டில், சுமந்திரன்தான் பின்னணியில் நின்று மணிவண்ணனை முதல்வராக்கினார் என்கிற விமர்சனம் மாவை சேனாதிராசா ஆதரவாளர்கள் அல்லது சுமந்திரன் எதிர்ப்பாளர்களால் முன் வைக்கப்பட்டது.

இவ்வாறு சில சம்பவங்களும், சில பல கருத்து முரண்பாடுகளும் அவ்வப்போது ஆதரவாளர்களால் முன்வைக்கபட்டு வந்தன. அது தற்பொழுது மேலும் சூடு பிடித்துள்ளது.

அதற்கு காரணம் இந்த தனிப்பட்ட வேட்பாளர்களின் ( தலைவர் உள்பட ) தீவிர ஆதரவாளர்கள் மற்றும் ஒரு ஊடகம் அல்லது ஊடகவியாளர்.

தனிப்பட்ட உறுப்பினர் சார்ந்த தீவிர ஆதரவாளர்கள் பற்றி நாம் பெரிதும் அலட்டிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. என்னதான் அவர்கள் தனிப்பட்ட உறுப்பினர்கள் சார்ந்து கருத்துக்களை முன்வைத்தாலும் “கட்சியை உடைக்கனும் அல்லது அழிக்கனும் என்கிற நோக்கம் கொண்டவர்கள் அல்ல. ஆனாலும் தொடர்ந்து இதே போன்று அவர்கள் செய்லபடுவார்களாக இருந்தால், அவர்களை அறியாமலேயே அதற்கு துணைபோனவர்களாக மாறுவார்கள். இதை புரிந்து கொண்டு அவர்கள் நடக்க வேண்டும்.

ஆனால் சில சொந்த பகையை தீர்த்து கொள்ள, 2009 இன் பின் தடுமாறும் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும், அந்த மூத்த ஊடகவியலாளரான நடேசபிள்ளை வித்தியாதரனை சாதாரணமாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. அவர் பற்றி விரிவாக ஏற்கனவே எழுதிய கட்டுரை ஒன்றை இதன் பின்னிணைப்பாக இணைத்துள்ளோம்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த பனிப்போர் உச்சம் பெற்றதுக்கு பின்னாலும் அவரது காலைக்கதிர் இருக்கிறது. அவரது பத்திரிகையாக இருக்கட்டும், அவரது முயற்சியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஈழநாடு பத்திரிகையாக இருக்கட்டும் தமிழ் தேசியத்தை கூறு போடும் நோக்கிலேயே செய்திகள் வெளியிடுகின்றன என்பது இரகசியம் அல்ல.

கடந்த பொது தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் மேல் மாவை சேனாதிராசா ஆதரவாளர்கள் கூடிய வேகத்தில் தாக்க முற்பட்டமைக்கு காரணமும் இந்த மூத்த ஊடகவியலாளர்தான். தமிழ் அரசுக் கட்சி தேர்தல் பரப்புரை மேடையில் வைத்தே தமிழ் அரசுக் கட்சியின் தலைவரை கடுமையாக விமர்சித்து, கட்சி உறுப்பினர்கள் மாறி மாறி விமர்சிக்கும் இந்த கலாச்சாரதுக்கு வித்திட்டவர் .

இது பற்றியும் தற்பொழுது மாவை சேனாதிராசா மேல் ,அவரை விமர்சிப்போர் முன் வைக்கும் கருத்துக்கள் சரியானவையா? அல்லது அவற்றில் சில காழ்ப்புணர்ச்சி காரணமானவையா? இதை எல்லாம் சரி செய்ய கட்சியின் தலைவராக மாவை சேனாதிராசா எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி அடுத்த கட்டுரையில் பாப்போம்.

அதற்கு முதல், கீழ்வரும் விடயங்களை சுட்டிக்காட்டி இந்த பந்தியை முடிக்கிறோம்.

தேர்தலுக்கு முன் எப்படி சுமந்திரனுக்கு எதிராக எப்படி கட்சியில் இருந்த ஒரு சிலர் செயல்பட்டார்களோ, அதே மாதிரி இப்போது மாவை சேனாதிராசாவுக்கு எதிராக கட்சியில் இருக்கும் சிலர் செயல்படுகிறார்கள்.

எப்படி தலைவராக இருந்து, சுமந்திரனுக்கு எதிராக செயல்படுபவர்களை மாவை சேனாதிராசா தடுக்க தவறினாரோ, அதே மாதிரி தடுக்க கூடிய சக்தி இருந்தும் இன்று மாவை சேனாதிராசாவுக்கு எதிராக செயல்படுபவர்களை சுமந்திரன் தடுக்காமல் இருந்து வருகிறார் .

அது பிழை என்றால் இதுவும் பிழை. இது சரி என்றால் அதுவும் சரி ஆகும். ஆனால் கட்சியை கடவுளால் கூட காப்பாற்ற முடியாமல் போய்விடும்.

நன்றி

யாழவன்.