ஆபாசமான வெளியீடுகளைத் தடை செய்யும் சட்டவரைவு அரசிதழ் அறிவிப்பு ரத்து

ஆபாச வெளியீடுகளைத் தடை செய்யும் சட்டவரைவு தொடர்பான அரசிதழ் அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி ஆபாச வெளியீடுகளைத் தடுக்கும் சட்டவரைவு தொடர்பான அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டதுடன், சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் அண்மைக்காலமாக இது தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆபாச வெளியீடுகளைத் தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்கும் போது, ​​ஆசிரியர்கள் பதிப்புரிமைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சில தரப்பினர் வாதிட்டனர்.

திருத்தப்பட்ட சட்டவரைவை மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறும், இதுவரை வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவித்தலை செல்லுபடியற்றதாக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை விடுத்ததாக நீதியமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.மாயாதுன்னே விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபாச வெளியீடுகளைத் தடைசெய்யும் சட்டவரைவை இயற்றியதன் நோக்கம் சிறார்களின் நலன் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதே தவிர, பேச்சு சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிப்பதற்காக அல்ல என்று அமைச்சின் செயலாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.