யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் இடம்பெற்ற சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் உள்ளிட்ட 18 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அவர்களை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் உத்தரவிட்டார்.
இன்று மாலை யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் சுதந்திர தின விழா இடம்பெற்றது.
இந்த விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழரின் காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தியும் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி நேற்று அறிவித்தது.
இந்த அறிவிப்பை அடுத்து ஆர்ப்பாட்டத்துக்கு தடை கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பத்தை விசாரித்த பதில் நீதிவான் தடை உத்தரவு கட்டளையை நேற்று மாலை வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இந்த நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டது. அது உரியவர்களுக்கு சேர்ப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் திட்டமிட்டபடி இன்று மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். அதன்போது பெருமளவு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தை தடுத்தனர்.
போராட்டம் தொடர்ந்த முன்னெடுத்த போது, பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை மீறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர், சட்டத்தரணி க.சுகாஷ் உள்ளிட்ட 18 பேர் கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தினர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் இன்றிரவு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் முற்படுத்தினர்.
நீதிமன்றத் தடை உத்தரவை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
பொலிஸார் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் சார்பான விண்ணப்பத்தை ஆராய்ந்த மேலதிக நீதிவான், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் 3 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் விடுவித்து கட்டளையிட்டதுடன், வழக்கை 22.02.2023ஆம் திகதிக்கு்தவணையிட்டார்.