புதிய மோட்டார் வாகன வருமான உரிமம் வழங்கும் முறை (eRL 2.0) ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து மாகாணங்களிலும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டார்.
இந்த அமைப்பின் மூலம், இணையவழி மூலம் வருவாய் உரிமங்களைப் பெற முடியும் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.
‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் இன்று (02) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேலும் தெரிவித்ததாவது:
இந்தநாட்டில் பொதுச் சேவையின் செயல்திறனை மேம்படுத்தவும், முறைகேடுகளைக் குறைக்கவும், ஒட்டுமொத்த பொதுச் சேவையும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்.
எனவே 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையின் ஊடாக இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலகப் பிரிவுகள், பிரதேச சபைகள், மாநகர சபைகள் மற்றும் மாவட்டச் செயலக அலுவலகங்கள் உள்ளிட்ட ஒன்பது அரச நிறுவனங்களைத் தெரிவு செய்து, அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் கீழ் ஒன்பது முன்னோடித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதுதவிர, இ.ஆர்.எல்.2.0 அறிமுகத்துடன், இம்மாதம் 7ம் திகதி முதல், அரச தொழில்நுட்ப அமைச்சும், இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப சங்கமும் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தை, இணைய வழி முறையில் வாகன வருவாய் உரிமம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.
இம்முயற்சியானது மேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து எட்டு மாகாணங்களையும் உள்ளடக்கியது. அதே நேரத்தில், இந்த திட்டத்தை அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கி, வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இணையவழி மூலம் பணம் செலுத்தும் வகையில் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த நோக்கத்தை அடைவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘Digicon 2023-2030’ வேலைத்திட்டத்தின் ஊடாக நாடுமுழுவதிலும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வினைத்திறனை அதிகரிப்பதற்கும் அரச சேவையை பலப்படுத்துவதற்கும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், தொழில்நுட்ப கண்காட்சிகள், மாநாடுகள், இளைஞர்களுக்கான பாராட்டு விழாக்கள் உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நாட்டில் புதிய தொழில்களை ஆரம்பிப்பதை இலக்காகக் கொண்ட டிஜிட்டல் முதலீட்டு மாநாடு ஒக்டோபர் 13 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 100 முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்வானது நாட்டின் முதலீடுகளை மேம்படுத்துவதற்கும், டிஜிகான் திட்டத்தின் முக்கிய நோக்கத்துடன் இணைவதற்கும் தயாராக உள்ளது. இது நாட்டிற்கான விரிவான டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தை நிறுவுவதாகும்.
இந்த முயற்சியானது அந்நியச் செலாவணியை விரைவாகக் குவிப்பதற்கு உதவும் என்றும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. – என்றார்.