இந்துவின் செய்தியை இலங்கை பாதுகாப்பு அமைச்சு மறுக்கிறது

இந்திய உளவுத்துறையின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது போல், இலங்கையில் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் “மீண்டும் குழுவாகி தாக்குதல்களை நடத்தவுள்ளனர்” என்ற செய்தியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இன்று சனிக்கிழமை மறுத்துள்ளது.

“செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. அத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் வரவில்லை” என்று அமைச்சின் பேச்சாளர் தி இந்துவிடம் கூறினார்.

இந்திய உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி இந்த அறிக்கை இலங்கை ஊடகங்களால் எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.

இலங்கை அரசியல் தலைவர்கள் தி இந்துவின் செய்தியை கடுமையாகச் சாடியுள்ளனர்.

சரியான நேரத்தில் வடக்கு- கிழக்கில் உள்ளவர்கள் இந்த வாரம் முள்ளிவாய்க்காலில் இழந்த அன்புக்குரியவர்களை நினைவு கூர்கின்றனர். இறந்தவர்களை நினைவுகூருவதைத் தடுக்க இது விதைக்கப்பட்டதா? இது ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்தோ, கோத்தாபய ராஜபக்சவிடமிருந்தோ, சவேந்திர சில்வாவிடமிருந்தோ, கமல் குணரட்ணவிடமிருந்தோ வந்ததா, என்று நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன உறவுகள் மேம்பட்டு வரும் இலங்கையின் இன்றைய சமூக சூழலில் “தமிழீழ விடுதலைப் புலிகள் மீள்குழுவு” பற்றிய தி இந்துவின் செய்தி மிகவும் கவலையளிக்கின்றது. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மையானது? உளவுத்துறை ஆதாரம் என்ன? அதிகாரிகள் கூடுதல் விளக்கங்களைத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.