Friday, September 22, 2023
HomeUncategorizedஇனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுக்கள் ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது - பொங்கல் வாழ்த்துச் செய்தியில் யாழ்.ஆயர்

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுக்கள் ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது – பொங்கல் வாழ்த்துச் செய்தியில் யாழ்.ஆயர்

“இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சம்பந்தப்பட்ட தமிழ்த் தலைமைகளுக்கும் இடையில் ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இந்த பேச்சுக்களில் தமிழ்த்தரப்புக்கள் மிக கவனமாக வும் அவதானமாகவும் இருக்கும் வகையிலும் சிங்களத் தலைமைகள் ஓரளவு நேர்மையாக இருக்கும் எனப் பரவலாக எண்ணப்படுகின்ற வகையிலும் நல்லது நடக்கும் என நம்புவோம்”

இவ்வாறு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

தைப்பொங்கல் விழா வாழ்த்துச் செய்தியில் ஆயர் தெரிவித்துள்ளதாவது;

பொங்கல் விழா ஒரு நன்றியின் விழா. நம்மை என்றும் நன்றி கூறிக்கொண்டே இருக்க அழைப்பு விடுக்கும் ஒரு விழா.தமிழ் மக்கள் கொண்டாடும் இந்த நன்றியின் பெருவிழாவை உலககெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் 2023ஆம் ஆண்டில் கொண்டாடும் வேளை இறையாசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.

இந்த நன்றியின் பெருவிழாவை இறைவன் – இயற்கை, அயலவர் என்ற மூன்று நிலைகளில் கடைப்பிடித்துக் கொண்டாட நாம் அழைக்கப்படுகிறோம்.

இறைவன் நம்மைப் படைத்து – பாதுகாத்து – அன்றாடம் பராமரித்து வழி நடத்தி வருகிறார். எமது அன்றாட அனைத்துத் தேவைகளிலும் தேடல்களிலும் அவரே முதலாகவும் முடிவாகவும் இருக்கிறார். இறைவனின் இந்த அளப்பரிய மாபெரும் செயலுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.

இயற்கை என்றும் எம்மோடு இணைந்திருக்கிறது. இயற்கையைப் பகைத்து நாம் வாழ முடியாது. இயற்கை அனைத்து நிலைகளிலும் எமக்குத் துணை புரிகிறது. நிலம் எம்மைத் தாங்குகிறது. எம்மை வாழ்விக்கும் நீரைத் தருகிறது. நாம் உண்ண நல்ல விளைச்சலைத் தருகிறது. இயற்கையை நேசியுங்கள். இயற்கையோடு இணைந்து வாழுங்கள். மரங்களை நடுங்கள். இயற்கைச் சூழல் மாசடையாமல் பாதுகாருங்கள்.

எம்மோடு வாழும் மனிதர்கள் அனைவரும் இறைவனின் படைப்புக்கள். அவர்கள் எம்மோடு வாழ இறைவனால் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் அனைவரோடும் நல்ல உறவை பேணுங்கள். அவர்கள் அனைவரையும் அவர்கள் நிலைகளில் வைத்து நன்கு புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் மனித குணங்களோடு அவர்களை அன்போடு ஏற்றுக் கொள்ளுங்கள். வாழும் குறுகிய காலத்தில் அனைத்து மனிதர்களையும் மகிழ்வியுங்கள். நீங்கள் சந்திக்கும் மனிதர் மனதுகள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்.

இலங்கை நாடு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று இவ்வாண்டு 75 ஆண்டுகள் நிறைவாகின்றன. பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளில், முழு வளர்ச்சி அடையாத நாடாக இலங்கை நாடு இருக்கிறது எனக்கணிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று பத்தாண்டு காலப்போர் நிகழ்ந்து ஏறக்குறைய 13 ஆண்டுகளாயும் இன்னும் நீதியோடு கூடிய நிரந்தர தீர்வு ஏற்படவில்லை என்பது வேதனையானது.

அண்மைக் காலத்தில் திரும்பவும் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சம்பந்தப்பட்ட தமிழ்த் தலைமைகளுக்கும் இடையில் ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இப்போது ஆரம்பிக்கப்பபட்ட இந்த பேச்சுக்களில் தமிழ்த்தரப்புக்கள் மிக கவனமாக வும் அவதானமாகவும் இருக்கும் வகையிலும் சிங்களத் தலைமைகள் ஓரளவு நேர்மையாக இருக்கும் எனப் பரவலாக எண்ணப்படுகின்ற வகையிலும் நல்லது நடக்கும் என நம்புவோம்.

இந்த பேச்சுக்கள் வழி இலங்கை நாட்டில், நிரந்தர தீர்வையும் ஏற்படுத்த தமிழ் கட்சிகள் அனைத்தும் தமது கட்சி முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் மறந்து செயற்பட வேண்டுமெனத் தமிழ் மக்கள் பெயரால் அன்புடன் வேண்டுகிறோம் – என்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular