இன்று முதல் QR குறியீட்டு முறை மூலம் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்

இன்று முதல், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதி (QR குறியீடு) முறையின் கீழ் மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது.

அதன்படி, இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம், டோக்கன்கள் மற்றும் பிற அமைப்புகளின் அடிப்படையிலான முறை செல்லாது என்றும், கியூஆர் குறியீடு முறை மட்டுமே இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி, QR குறியீட்டைக் கொண்ட எவரும் ஒரு முறை அல்லது எத்தனை முறை வேண்டுமானாலும் வாராந்திர எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறலாம்.

QR குறியீடு முறையைப் பின்பற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முன்னுரிமை வழங்கப்படும் என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் வரை QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் வழங்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் QR குறியீட்டைப் பெற்ற வாகனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 இலட்சத்தை எட்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதேவேளை, முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருபவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என பெற்றோலிய ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் இணைச் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் கோரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது சுகாதார நடைமுறைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.