இருதயநோயாளர்கள் எந்தத் தயக்கமுமின்றி கோவிட்-19 தடுப்பூசியைப் பெறலாம்

செயலில் அல்லது செயலற்ற இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்று நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் இருதயநோய் மருத்துவ வல்லுநர் டிஸ்னா அமரதுங்க தெரிவித்தார்.

இதய நோயாளிகள் எந்தத் தயக்கமுமின்றி கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுமாறு அவர் வலியுறுத்தினார்.

இன்று (17) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இருதயநோய் வல்லுநர் டிஸ்னா அமரதுங்க இதனைத் தெரிவித்தார்.

“தற்போது இருதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு மருந்து எடுத்துக்கொண்டிருக்கும் நபர்கள் தடுப்பூசி பெறுவதற்காக வழக்கமான மருந்துகளை உட்கொள்வதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை.

தற்போது வோஃபரின் (Vofarin drug) மருந்தைப் பெறும் நபர்கள் தடுப்பூசி பெறுவதற்கு முன்பு ஐஎன்ஆர் (INR test) பரிசோதனையை நடத்த வேண்டும் என்றும், அதன் நிலை மூன்றுக்கும் குறைவாக இருந்தால், நோயாளிகள் கோவிட்-19 தடுப்பூசி அலகைப் பெறலாம்” என்றும் இருதயநோய் வல்லுநர் டிஸ்னா அமரதுங்க குறிப்பிட்டார்.