இலங்கைக்கு மேலதிக நிதியுதவி; இந்திய சிறப்புக் குழு ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சு

இலங்கைக்கான மேலதிக நிதியுதவி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய அரசின் சிறப்புக் குழுவொன்று இன்று காலை இலங்கை வந்தடைந்தது.

இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாட்ரோ தலைமையிலான தூதுக்குழுவே கொழும்புக்கு வருகை தந்துள்ளது.

இந்திய பொருளாதார விவகாரங்கள் துறை, நிதி அமைச்சின் செயலாளர் அஜய் சேத், அனந்த நாகேஸ்வரன் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே ஆகியோர் மற்ற பிரதிநிதிகளாக உள்ளனர்.

குறித்த குழுவினர் இன்று முற்பகல் 9.20 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் இருந்து இந்தியாவிற்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதியை சந்தித்ததுடன், பிரதமருடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் குறுகிய மற்றும் நீண்ட கால உதவிகள் குறித்தும் மூத்த அதிகாரிகளுடன் தூதுக்குழுவினர் கலந்துரையாடுவார்கள்.

இன்று மாலை சுமார் 6 மணியளவில் அவர்கள் மீண்டும் இந்தியா புறப்படுவார்கள்.