மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எதிராக நீதிமன்றில் நடவடிக்கை எடுக்க அரசு தயாராகி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட கூட்டத்தில் பங்கேற்ற மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளை ஆணைக்குழு உறுப்பினர்கள் 2 பேர் அச்சுறுத்தியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஜனவரி 27 அன்று குற்றம் சாட்டினார்.
ஆவணங்களில் கையொப்பமிடுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் தமக்கு எதிராக தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றப்பத்திரிக்கையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசினால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று முற்பகல் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தின் பல சரத்துகளை மீறி தன்னிச்சையாக செயற்பட்டு இலங்கை மின்சார சபையின் மின்வெட்டு திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் தடுத்துள்ளார்.
ஜனவரி முதலாம் திகதி முதல் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு தற்போதைய இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அனுமதி மறுத்துள்ளதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அரசின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயாராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியதும் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.