ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் 2ஆவது ஆண்டு நிறைவு இன்று

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாத தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நிறைவு இன்றாகும்.

நாட்டை மட்டுமல்ல, உலகையும் உலுக்கிய இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அவர்களில் 40 வெளிநாட்டினர் மற்றும் 45 குழந்தைகள் அடங்குகின்றனர்.

ஏப்ரல் 21, 2019 அன்று காலை 8:45 மணியளவில், கட்டுவபிட்டியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயமும், கொழும்பின் கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயமும் வெடிகுண்டுகளால் அசைந்தன.

அதே நேரத்தில், காலை 8:47 – 8:54 மற்றும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, கொழும்பில் உள்ள மூன்று முன்னணி நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் தற்கொலை குண்டுவெடிப்பை மேற்கொண்டனர், மேலும் பல உயிர்களைக் கொன்றனர்.

காலை 9:12 மணியளவில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஒரு தற்கொலை குண்டுதாரி தாக்குதலை நடத்தினார்.

அதற்குள், நாடு முழுவதையும் பயமுறுத்திய பயங்கரவாதிகள் பல உயிர்களைப் பறித்திருந்தனர்.

பெற்றோரை இழந்த பிள்ளைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் என பயங்கரவாதிகளின் மிருகத்தனமான செயல்களால் இன்று பல நூற்றுக்கணக்கான மக்கள் கைகால்களையும் கண்களையும் இழந்து தவிர்க்கின்றனர்.

மனிதகுலத்தின் மீதான இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் உண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் இறந்த அனைவருக்குமாக நாடுமுழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காலை 8:45 மணிக்கு ஒவ்வொரு தேவாலயத்திலும் மணி ஒலிக்கும் போது அனைவரையும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியைக் கடைப்பிடிக்குமாறு கத்தோலிக்க திருச்சபை கேட்டுக்கொண்டுள்ளது.

நாடுமுழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.