உளுத்தம் பருப்பு, பயறு, கௌப்பி, புளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை யாழ்ப்பாணத்தில் எகிறியது – இறக்குமதித் தடையால் இந்த நிலை

0

அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு அமைய இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் யாழ்ப்பாணத்தில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் சுப நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படும் உளுத்தம் பருப்பு ஒரு கிலோ கிராம் ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. உள்ளூர் உளுந்து தட்டுப்பாடாக உள்ள நிலையில் அதன் விலை ஒரு கிலோ கிராம் 850 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், உளுந்து பயிர்ச் செய்க்கை விதை உழுந்து பெறுவதற்கும் சந்தையில் தட்டுப்பாடு நிலவுகின்றது.

மேலும் பழப் புளி ஒரு கிலோ கிராம் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகவும் செத்தல் மிளகாய் ஒரு கிலோ கிராம் 450 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகவும் பயறு ஒரு கிலோ கிராம் 280 ரூபாயிலிருந்து 340 ரூபாயாகவும் கௌப்பி ஒரு கிலோ கிராம் 280 ரூபாயிலிருந்து 330 ரூபாயாகவும்

மஞ்சள் பருப்பு ஒரு கிலோ கிராம் 160 ரூபாயிலிருந்து 170 ரூபாயாகவும் மைசூர் பருப்பு ஒரு கிலோ கிராம் 150 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது.

கோரோனா தொற்று பரவலுக்கு முன்னர் ஒரு கிலோ கிராம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மஞ்சளின் விலை இன்று 4 ஆயிரத்து 700 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த அத்தியாவசியப் பொருள்கள் மீதான இறக்குமதித் தடையை அரசு நீக்காவிடின் அவற்றை வரும் தை மாதத்தில் உள்ளூர் சந்தையில் பெற முடியாத நிலை ஏற்படும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.