உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8,000 உறுப்பினர்களுக்குப் பதிலாக, 5,000க்கும் குறைவான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்து வருகின்றது.
இதன்படி, தேசிய எல்லை நிர்ணயக் குழுவினால் தொகுக்கப்பட்ட புதிய அறிக்கையின் படி 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான குழு, மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8,000 இலிருந்து 4,714 ஆக குறைக்க முன்மொழிந்துள்ளது.
செயல்படுத்தப்பட்டால், வரி செலுத்துவோர் நிதியில் அரசு கணிசமான சேமிப்பைத் தக்கவைக்கும்.
இது தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக ஏற்கனவே கோரப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை செல்லாததாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.