ஊடகப்பணிகளை அறந்தவறாது தொடர்வோம்

2018 ஜனவரி மாதம் 19ஆம் திகதி அன்று உங்கள் ‘முதல்வன்’ muthalvannews.com என்ற இணைய முகவரியில் தனது பயணத்தை ஆரம்பித்தான்.

மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்ற பாரதியாரின் வரிகளை இலக்காகக் கொண்டு, புயலிடை ஒரு தோணியாய் புறப்பட்ட இந்தப் பயணம் சந்தித்த தடைகள் – தடங்கல்கள் ஏராளம்.

முதல்வன் இணையத்தை அரச சார்பு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் வாங்கிவிட்டார் என்ற கதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னணியில் ஊடக நண்பர்கள் இருந்தமைதான் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாக அமைந்தது.

உலகெங்கும் வாழும் ஈழத்தமிழினத்தின் குரலான பயணம் இது.

வாசகர்களாகிய உங்களின் ஆர்வமும், இன்னும் நெடிய பயணத்தைத் தொடர வேண்டும் என்ற ஊக்கத்தை எமக்கு அளிக்கிறது.

வணிக மயப்படுத்தப்பட்டு விட்ட ஊடக அறம், சார்புநிலையே நடுநிலையாகப் பேசப்படுகின்ற அவலம் எல்லாம் நவீன உலகில் முதலாளித்துவ ஊடகங்களின் சாபக்கேடு.

சமூக ஊடகங்களினதும், இணைய ஊடகங்களினதும் பெருக்கம், தமிழ் ஊடகத்துறையின் மொழி, அறம், பண்பாடு, பாரம்பரியம் எல்லாவற்றுக்குமே பெரும் சவால்.

புற்றீசல்களாய் முளைத்த ஊடகங்கள், ஊடகங்களின் பலத்தை மட்டுமே அறிந்து கொண்டனவேயன்றி, ஊடக அறத்தை மதிப்பதேயில்லை.

இப்படியொரு சூழலில், ஊடக அறத்தில் இருந்து விலகாமல், பொழுது போக்கு மாயைகளுக்குள் எமது வாசகர்களை சிக்கிக் கொள்ள வைக்காமல், அவர்கள் எம்முடன் இருக்கும் சில நிமிடங்களுக்கு பயனுள்ள விடயங்களை மாத்திரம், பகிர்ந்து கொள்கிறோம் என்ற மனநிறைவு எமக்கு நிறையவே உண்டு.

நான்காவது ஆண்டில் பயணத்தைத் தொடரும் ‘முதல்வன்’ தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல், வரலாறு, மொழி, பண்பாடு சார்ந்த அடுத்த கட்டம் பற்றிய தேடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முனைகிறான்.

வணிக நோக்கத்தை முன்னிறுத்திய ஊடகப் பரப்பில் இருந்து விடுபட்டு, செய்திகளிலாயினும், கட்டுரைகளிலாயினும், ‘முதல்வன்’ தனித்துவ அடையாளத்தை பேணுவதில் வெற்றி கண்டிருப்பதாகவே உணர்கிறான்.

எமது செய்திகளையும், கட்டுரைகளையும் பிரதி செய்து வெளியிடுவதில், தம்மை முன்னணி ஊடகங்களாக கூறிக்கொள்ளும், இணைய, அச்சு ஊடகங்கள் காட்டும் அதீத ஆர்வமே அதற்குச் சான்று.

இந்த மூன்று ஆண்டுகளைத் திரும்பிப்பார்க்கையில் போதாமை தெரிகின்றது என்பது உண்மைதான்.

ஆனால் முதல்வன் சமூத்திற்கு நாட்டு நடப்பை அறியவைப்பதிலும் அதனை தெளியவைப்பதிலும் அதற்காக துணிந்து நிற்பதிலும் கணிசமான அளவில் பங்காற்றி இருப்பது என்பதும் மெல்லிய ஒளிச்சுவடாக படிந்து கிடக்கின்றது.

ஈழத்தமிழர் வாழ்வியலை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்துவதில் முனைந்தமை,

வழிமூலமற்ற செய்திகளை வெளியிடாமல் தவிர்த்தமை,

தற்கொலைகள், தனிப்பட்ட மோதல்கள் தொடர்பான செய்திகளைத் தவிர்த்தமை,

அரசியல் சேறு பூசல்களை தவிர்த்தமை,

என்பனவாய் அடுக்கிச் செல்ல முடியும். ஆனால் இவை சொற்பமே.

போதுமான வளங்களற்ற நிலையிலும், இந்தளவுக்காயினும் செயலாற்ற முடிந்தது ஓரளவுக்கு திருப்தி தருகின்றது.

பலமுனை இடர்கள் தாண்டி நான்காம் ஆண்டுப் பயணத்தை முதல்வன் நம்பிக்கையுடன் தொடர்கிறான் என்பதை மகிழ்வுடனும் பெருமையுடனும் அறிவித்துக்கொள்கிறோம்.

எமது பயணத்தின் போதான சுமைகளினைத் தாங்க தோள் கொடுத்த – கொடுத்துக்கொண்டிருக்கும், முதல்வன் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது உளம்கனிந்த நன்றி கலந்த வாழ்த்துகள்.

உங்களின் தோளணைவுடன் நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை என்ற மகுட வாசகத்துடன் தமிழ்ச் சமூகத்திற்கான ஊடகப்பணிகளை மேலும் அறந்தவறாது தொடர்வோம்.

ஆசிரியர்

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!