ஊடகவியலாளர் வித்தியாதரன் நடுநிலமை தன்மையுடன் செயல்படுகிறாரா?

ஒரு காலத்தில் தமிழ் தேசியதின் பாதையில் உறுதியாக இருந்தவரும் , ஈழத்தின் மூத்த ஊடகவியலாளராகவும் விளங்கக்கூடிய நடேசபிள்ளை வித்தியாதரன், 2009இன் பின்னர் ஊடக நடுநிலமை தன்மையுடன் , தமிழ் மக்களின் பால் அக்கறையுடன் , சமூக சிந்தனைகளுடன் நடந்து கொள்கிறாரா? என்கிற சந்தேகம் தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கிறவர்கள் மத்தியில் அவ்வப்பொழுது எழுவதும் பின்னர் அது அடங்கிப்போவதுமாக இருந்து வருகிறது. அதன் உண்மை தன்மைகளை பற்றி ஆராய விளைகிறது இந்த பத்தி .

2009இல் அவர் கைது செய்யப்பட்டத்திலிருந்து இன்றுவரை அவருடன் தொடர்புபட்ட விடயங்கள் , அவ்வப்பொழுது ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் என்பவற்றை ஆராய்வதே இதற்கு பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் அவரது கைதுக்கு முன்னரான காலம் என்பது தமிழீழ விடுதலை புலிகள் இயங்கிய காலம். அந்த காலத்தில் வித்தியாதரன் தமிழ் தேசியம் தொடர்பாக மிக பற்றுள்ளவராக, தமிழ் தேசியத்தின் பால் மக்களை ஈர்க்க கூடியதான எழுத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகளை வரைந்து வந்தவர் என்பதும், உதயன் சுடரொளி ஆகிய பத்திரிகைகள் விடுதலை புலிகளுக்கு சார்பாக எழுதி வந்ததால் அவை தாக்குதலுக்கு உள்ளானது என்பதும் , கிட்டத்தட்ட 6 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என்பதும் எல்லோரும் அறிந்ததும் எவரும் மறுக்கமுடியாத உண்மைகளும் ஆகும்.

எனவேதான் அவரின் கைதின் பின்னரான சம்பவங்களை ஆராயவிளைகிறது இந்த கட்டுரை .

கைதுசெய்யப்பட்ட பின்னணி

2009ஆம் ஆண்டு வன்னியில் இறுதி கட்டப்போர் உச்ச நிலையை அடைந்திருந்தது. அப்போது விடுதலை புலிகள் சார்பாக செயல்பட்டவர்கள், ஆதரவாளர்கள் என்று பலர் சுடப்பட்டும் கடததப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும். கொண்டிருந்தார்கள். 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென்னிலங்கை ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார். மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்த ஊடகவியலாளர் அவர்.

பெப்பரவரி மாதம் நடுப்பகுதியில் லசந்த விக்கிரமதுங்க சுட்டு கொன்றது பற்றி வித்தியாதரனிடம் ஊக்கவியலாளர் ஒருவர் கேட்ட பொழுது “தங்களுக்கு எதிரான ஊடகவியலார்களை இவர்கள் கொல்வது புதிய விடயம் அல்ல . ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. வீட்டிலிருந்து வருகின்ற நானே உயிரோடு வீட்ட போய் சேருவேனோ என்பது பற்றி எனக்கு தெரியாது ? ” என்ற கருத்துக்கள் வெளிப்பட கூடிய மாதிரி பதில் சொல்லி இருந்தார் .

அந்த பேட்டியை வழங்கி சரியாக ஆறாவது நாள் அதாவது 2009, பெப்ரவரி 26 அன்று நடேசபிள்ளை வித்தியாதரன், மவுண்ட்லேனியாவில் நடந்த தனது உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டிருந்த பொழுது வெள்ளை வானில் வந்த ஆறு பேர் அவரை நெருங்கி விசாரிக்க வேண்டும் என்று சொல்லி வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். அதில் இருவர் அல்லது மூவர் பொலிஸ் சீருடை போட்டிருந்தார்கள். மற்றவர்கள் சிவில் உடை அணிந்திருந்தார்கள்

கிட்டத்தட்ட ஒரு கடத்தல்தான் அது . அந்த கடத்தலை செய்தவர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் ( Colombo Crime Division -CCD) என்று சுருக்கமா அழைக்கப்படும் அந்த பொலிஸ் பிரிவில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் விஜயரட்ன தலைமையிலான பொலிஸாரே அவரைக் கடத்தியிருந்தனர் .

வித்தியாதரன் கடத்தப்பட்டது தொடர்பாக பல எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வெளிநாட்டு தூதரகங்கள் நேரடியாக அழைப்பு எடுத்து அழுத்தம் கொடுத்தனர். பொலிஸ் சீருடையில் சிலர் வந்ததை மக்களில் பலர் பார்த்திருந்தனர் . அதனால் அவரது கடத்தலை உத்தியோகபூர்வ கைதாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அன்று இரவே அவரை ஒரிடத்தில் வைத்து சிசிடியினர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பது போல் பொறுப்பேற்று, தெமேட்டகொடவில் உள்ள தங்களது பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவந்தனர் .

சிசிடியில் வித்தியாதரன்

எழுத்துக்களில் வீரியம் காட்டியது போல நடேசபிள்ளை வித்தியாதரனால் பொலிஸிடம் வீரியம் காட்ட முடியவில்லை. வித்தியாதரன் கைது செய்யப்பட்ட முதல் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரான திஸாநாயகம் அவ்வாறானவரே. பயிற்சிகளை எடுத்து, பல களங்களை கண்ட போராளிகளே கைது செய்யப்பட்டு சித்திரவதைகளின் பின் பல காட்டி கொடுப்புக்களை செய்திருந்த பொழுது வெறும் ஊடகவியலாளர்களான இவர்கள் தமிழ் தேசியத்தின் பால் உறுதியாக நின்று தான் அங்கே பதில்களை வழங்கி இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது .

ஆனால் இவர்கள் அவ்வளவாக சித்திரவதைகளை அனுபவிக்கவில்லை. சித்திரவதைகள் ஆரம்பிக்க முன்னரே குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிடுவார்கள். வித்தியாதரன் சிசிடியில் இருந்த பொழுது திஸாநாயகம் புதிய மகசின் சிறைச்சாலையில் இருந்தார் . வித்தியாதரன் கைது செய்யப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாள்களிலேயே தனது வாக்குமூலத்தைக் கொடுத்து விட்டார். அதேவேளை தனது கைது “அடிப்படை மனிதவுரிமை மீறல்” என்று சொல்லி உயர் நீதிமன்றில் தனது சட்டத்தரணியான கௌரி சங்கரி மூலம் (Fundamental Rights ) மனு தாக்கல் செய்திருந்தார் .

அவரது கைது, அவரது வழக்கு என்பதற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கி கொண்டிருந்ததால் அவரது வழக்கில் அவர் வெற்றி பெறுவார் என்றே எல்லோரும் நினைத்திருந்தார்கள் . ஆனால் வெளியில் ஊடகங்கள் காட்டிய மாதிரி “கடுமையாக கஷ்டப்பட்டு கொண்டிருந்தாரா வித்தியாதரன்? ” என்று கேட்டால் விடை இல்லை என்றே வரும் .

வித்தியாதரன் இருந்த சிசிடி பிரிவு இயங்கிக்கொண்டிருந்த கட்டடம் நான்கு மாடிகளை கொண்ட கட்டடம் . சிசிடிக்கு பொறுப்பாக இருந்தவர் பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க ஆவார் . (அவர் பின்னர் பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் இருந்தவர் ). அவரது அலுவலகம் நாலாவது மாடியில் இருந்தது . இந்த மாடியில் வைத்து தான் சித்திரவதையுடன் கூடிய விசாரணை நடக்கும் .

மூன்றாவது மாடியில் இருந்தவர் அனுரசேனாநாயக்கவுக்கு அடுத்த பதவிநிலை அதிகாரியாகும். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரநிலையில் இருந்தவர் . சில சித்திரவதைகள் இவர் இருக்கும் தளத்திலும் நடைபெறுவதுண்டு

இரண்டாவது மாடியில் அந்த பொலிஸ் நிலையத்துக்கான பொறுப்பதிகாரியின் (OIC ) அலுவலகம் இருந்தது

முதலாவது மாடியில்தான் பயங்கவராத சந்தேக நபர்களை அல்லது சந்தேக நபர்களை முதல் கட்டமாக விசாரிக்கும் உப பொலிஸ் பரிசோதகர் விஜயரட்ன அலுவலகம் இருந்தது. தமிழ் கைதிகளை விசாரிக்க உதவியாக ரங்கநாதன் எனும் ஒருவரும் அங்கிருந்தார். முதல் கட்ட விசாரணையில் ஒருவரை தடுத்து வைத்து விசாரிக்க வேண்டுமா? அல்லது தவணை கொடுத்து மீண்டும் அழைத்து விசாரிக்கிறதா? என்பது பற்றிய முடிவுகளை எடுப்பது அவர்கள்தான் .

ஒருவரை முறைப்படி கைது செய்வதா? அல்லது தூக்கி விசாரிப்பதா என்பதையும் அவர்கள் தங்கள் மேலதிகாரிகளின் துணையோடு முடிவெடுப்பார்கள் . ஒருவரை தடுத்து வைத்து விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், கீழே தரையுடன் உள்ள தளத்தில் இருக்கும் சிறை அறைகளில் தடுத்து வைக்கப்படுவார்கள் .

அவ்வாறு கைதிகளை அடைத்து வைக்கவென்று அங்கே மூன்று சிறை அறைகள் இருந்தன .அந்த அறையில் தடுத்து வைக்கப்படுகின்ற கைதிகளுக்கு, அவசரகால சட்டம் அல்லது பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்கிறதை உறுபடுத்தி உறவினர்களுக்கு படிவம் ஓன்று கொடுப்பார்கள். தடுத்து வைத்தவர்ளை மாதத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு கிழமைக்கு ஒரு தடவை உறவினர்கள் சந்திக்கும் வாய்ப்பும் கொடுப்பார்கள்.

அவ்வாறு உறவினர்கள் வரும்பொழுது அவர்களோடு கதைக்கிற நேரம் மட்டும் சிறை அறைகளிலிருந்து வெளியே திறந்து விடுவார்கள் மற்றும்படி மலம், சலம் கழித்தல் குளித்தல் என்று எல்லாமே சிறை அறைகளில்தான் . மூன்று பேர் இருக்க கூடியதான சிறை அறையில் 13 பேர் வரை அடைத்து வைத்திருப்பார்கள்.

இதுதான் அங்கே தடுத்து வைக்கப்படுபவர்களுக்கான நடைமுறை. ஆனால் ஊடகவியலாளர் வித்தியாதரன் அவ்வாறு அங்கே இருக்கவில்லை. அவர் முதலாம் மாடியிலேயே இருந்தார். அங்குள்ள ஒரு மேசையில் பத்திரிகை, புத்தகங்கள் படித்தபடி இருப்பார் . இரவில் கூட எந்தவித கை விலங்கும் போடப்படாமலே அங்கேயே படுப்பார் .

அவர் அந்த கட்டடத்துக்குள் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் . பொலிஸார் குளிக்கும் இடத்திலேயே அவர் குளிக்கலாம் . சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு விருந்தாளி மாதிரியே அங்கே அவர் இருந்தார்.

அவரை சந்திக்க அவரது மனைவி தினமும் வருவார்.ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து வரும் சாப்பாட்டையே அவர் சாப்பிட்டார். மனைவியும் அவர் இருந்த முதலாவது மாடியில் போய் நேரே சந்தித்து கதைப்பார் .

அவர் இருந்த சம காலத்தில் அவரை விட செல்வாக்கான கேணல் தர இராணுவ வீரரான ரஞ்சித் பெரேரா போன்றவர்களே அங்கு இருந்தார்கள் . ஆனால் அவரை கூட அந்த சிறை அறையில் பத்தோடு பதினொன்றாகவே அடைத்து வைத்திருந்தார்கள். ஊடகவியலாளர் வித்தியாதரனை தவிர வேறு எவருக்குமே அத்தகைய சிறப்பு சலுகை அங்கே வழங்கபட்டிருக்கவில்லை.

கீழே குளிக்கப் போகும் பொழுது சிறை அறையில் இருப்பவர்களோடு சிறிது நேரம் கதைத்துவிட்டு போவார் . தன்னை விடுதலை செய்யப்போகிறார்கள் என்றும் விடுதலை செய்தாலும் இவர்களை நான் விடப் போவதில்லை என்றும் அவர்களுக்கு கூறுவார். சிறை கைதிகளை பார்க்க வரும் செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் கொடுத்துவிட்டுச் செல்லும் கதை புத்தகங்களை மாற்றி எடுத்து செல்லுவார் .

ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வித்தியாதரன் நீதிவான் நீதிமன்றில் வைத்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். அவரது விடுதலை அவர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையிலும், வெளியிருந்து கிடைத்த அழுத்தங்கள் கரணமாகவும் நடந்தது என்றும் பலர் நினைத்தாலும் ” விடுதலை ” செய்வது சம்பந்தமாக அவர் சில நிபந்தனைகளை அவர் ஏற்றிருந்துப்பார் என்றே சில அவதானிகள் கருத்து வெளியிட்டார்கள்.

விடுதலையின் பின் வித்தியாதரன்

ஊடகவியலாளர் வித்தியாதரன் விடுதலை செய்யப்பட்டமை பலரால் வரவேற்க்கப்பட்டிருந்தது . விடுதலை செய்யப்பட்டு அடுத்து வந்த இரண்டாவது நாள் சுடரொளி பத்தி்ரிகை மூலம் ஒரு நீண்ட நன்றி கடிதம் ஒன்றை அவர் வரைந்திருந்தார். யார் யாருக்கு எதிராக அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்திருந்தாரோ அவர் அவர்களுக்கு எல்லாம் அதில் நன்றி கூறியிருந்தார். அவரது விடுதலை அடிப்படை உரிமை மனுத் தாக்கத்தால் ஏற்பட்டிருந்தாலும் கூட , அந்த வழக்கு நிலுவையிலேயே இருந்து வந்தது. அவர் நினைத்திருந்தால் அந்த மனுவைத் தொடர்ந்து கொண்டு சென்றிருந்திருக்கலாம். ஆனால் விடுதலை செய்யட்டபின்னர் வந்த முதலாவது தவணையில் நிபந்தனைகளின்றி அவர் அந்த மனுவைக் கைவாங்கினார் . இந்த மனுவை அவர் கை வாங்கியதன் பின்னணியில் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிபந்தனை இருந்திருக்கலாம் .

வித்தியாதரனின் அரசியல் ஆர்வமும் செயல்பாடுகளும்

2010 ஆம் ஆண்டு நடைபெற இருந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட ஊடகவியலாளர் வித்தியாதரன் விரும்பினார். சம நேரத்தில் உதயன் – சுடரொளி பத்திரிகைகளின் உரிமையாளரும் , வித்தியாதரனின் மைத்துனருமான ஈஸ்வரபாதம் சரவணபவனும் தேர்தலில் போட்டியிட விரும்பினார் . ஆனால் ஈஸ்வரபாதம் சரவணபவனை வேட்பாளராக்குவது என்று கூட்டமைப்பு இறுதி செய்தது .

இதனை அறிந்த பின்னர், ” உதயன்- சுடரொளி’ தமிழ்த் தேசியப் போராட்டத்தின் மீதும், அது கொடுத்த விலைகளின் மீதும் கட்டமைக்கப்பட்ட ஒன்று. அப்படிப்பட்ட நிலையில், அதனைக் காட்டி பதவிகளைப் பெறுவதில் தனக்கு உடன்பாடில்லை. அதனால் “உதயன்- சுடரொளி’ பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக கூறி ஊடகத்திலிருந்து விலகினார் வித்தியாதரன் . ஆனாலும் தொடர்ந்து தான் பதவி வகித்து வந்த தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு கிளை செயலாளராக இருந்து வந்தார் .

நாடாளுமன்றத் தேர்தல் மூலம் கிடைத்த தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் விரும்பியிருந்தார். ஆனால் அதுவும் அவருக்கு கைகூடவில்லை . ஆனாலும் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான உறுதி மொழியை மாவை சேனாதிராசா கொடுத்திருந்தார் என்று அப்போதைய செய்திகள் தெரிவவித்திருந்தன. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையுடன், மாகாண சபைத் தேர்தல் பற்றிய ஆயத்தப்படுத்தல்கள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யாராக இருக்கும் என்ற எதிர்வுகூறல்களில் ஊடகவியலாளர் வித்தியாதரன் பெயரும் அடிபட்டது.

அது பற்றி வித்த்தியாதரனிடம் ஊடகவியலாளர் கேட்ட பொழுது “வடமாகாண முதலமைச்சராக நான் வரவேண்டும் என்று மக்கள் விரும்பினால், அதற்கான ஆணையை அவர்கள் தருவார்களாக இருந்தால், அப்பதவியை ஏற்று மக்கள் சேவையில் ஈடுபடுவேன் என்றும் பிழையானவர்கள் கையில் அந்த பதவி போய்விடக் கூடாது தானே ? ” என்றும் கூறியிருந்தார் .

ஆனால் அவ்வாறு அவர் தனக்கு முதலமைச்சர் வேட்பாளராக வருவதில் விருப்பம் இருக்கு என்று கூறியிருந்தும் கூட, தமிழ் அரசுக் கட்சி அவரை விலத்தி சி வி விக்கினேஸ்வரனை முதலமைச்சராக்கும் வேலைகளில் ஈடுபட்டது. சி. வி.விக்கினேஸ்வரன் பெயர் இல்லை என்றாலும் கூட வித்தியாதரன் பெயர் பரிந்துரைக்குள் வந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக தற்பொழுது இருக்கும் மாவை சேனாதிராசா அந்த பதவிக்கு வருவதற்கு விரும்பியிருந்தார் . மேலும் வித்தியாதரனின் மைத்துனரும் , நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஈஸ்வரபாதம் சரவணபவனும் வித்தியாதரன் தமிழ் அரசுக் கட்சிக்குள் ஒரு அரசியல்வாதியாக வருவதை விரும்பியிருக்கவில்லை .

இதை எல்லாம் புரிந்து கொண்ட நடேசபிள்ளை வித்தியாதரன், தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு கிளையின் செயலாளர் பதவியை துறந்துவிட்டு யாழ்ப்பணம் நோக்கி தனது இருப்பிடத்தை மாற்றினார். 2013இல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அரசியலுக்குள் கொண்டு வரும் முயற்சியை எடுத்தார் . தமிழ் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப போராளிகள் அரசியலுக்கு வருவதுதான் ஒரே வழி என்று கட்டுரைகள் எழுத்த் தொடங்கியிருந்தார்.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தனது ஊடக வாழ்க்கை பயணத்தை அடிப்படையாக கொண்ட சுயசரிதை புத்தகமான ” என் எழுத்தாயுதம் ” புத்தகத்தை வம்பலபிட்டியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் வைத்து வெளியிட்டார் . அந்த புத்தக வெளியீட்டுக்கு அப்பொழுது எதிர்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க , அமைச்சராக இருந்த ரவுப் ஹக்கீம், இரா சம்பந்தன் , டக்ளஸ் தேவானந்தா போன்ற அரசியல் முக்க்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர் . உதயன் மீது நடந்த தாக்குதல் பிண்ணனியில் செயல்பட்டவர்கள் என்று ஈபிடிபி யை தன் எழுத்துக்களால் துளைத்தெடுத்த வித்தியாதரன் ஈபிடிபி கட்சியை அழைத்தது மட்டுமல்லாது , தனது புத்தகத்துக்கான வாழ்த்துரை வழங்கும் சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தது பற்றி பல விமர்சனங்கள் அப்பொழுது வெளிவந்தன.

எப்பொழுதுமே தன்னை செல்வாக்கானவர் என்று காட்டும் முனைப்பாடுகளோடேயே அவர் இயங்கி கொண்டிருந்தார். முன்னாள் போராளிகளின் வழிகாட்டி தானே என்று கூறி அவர்களை ஒருங்கிணைத்து கொண்டிருந்த பொழுது அவருக்கு எந்தவித தடைகளும் ஏற்படவில்லை. மகிந்த – கோத்தாபய ஆகியோர் ஆட்சியில் முன்னாள் போராளிகளை ஒருங்கிணைத்தது மட்டும் அல்லாமல் உச்ச தமிழ் தேசிய கருத்துக்களை தொடச்சியாக வெளியிட்டு வந்தார். கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்து வந்தார் . குறிப்பாக இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை தொடர்ந்து தாக்கிவந்தார்.

2015 இல் நடக்க இருந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் ஒருங்கிணைத்த போராளிகலிருந்து இருவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் வேட்பாளர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளீர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து பரப்புரை செய்தார். போராளிகளை நேரடியாக இரா சம்பந்தனிடம் அனுப்பியும் இருந்தார் .ஆனால் அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை, வித்தியாதரனின் அரசியல் ஈடுப்பாட்டில் உள்ள பின்னணி மற்றும் இதர காரணங்களை அடிப்படையாக கொண்டு ” போராளிகளை வேட்பாளராக களமிறக்குவதில் உடன்பாடு இல்லை” என்று மறுத்திருந்தார் இரா. சம்பந்தன்.

அதனால் தான் இணைத்த போராளிகளை முன்னிறுத்திதானே முதன்மை வேட்பாளராக நின்று தேர்தலை சந்திக்க போவதாக சொல்லி களமிறங்கினார். சிதறிக் கிடந்த தமிழ் அரசியலை ஒன்றாக்குவதற்காக பல தமிழ் தேசியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிய ஊடகவியலாளரான வித்தியாதரன், அதே தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்க களமிறங்கியதை அரசியல் விமர்சகர்கள் பலர் விமர்சித்திருந்தார்கள் . இருந்தும் அவர் தேர்தலில் நின்றார் . ஆனால் மிக சொற்ப வாக்குகளையே அவரால் பெற முடிந்தது .

மீண்டும் ஊடகத்துறையில் வித்தியாதரன்

அதன் பின்னர் மீண்டும் ஊடகத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் முனைப்பைகளை தொடங்கினார் . 2016ஆம் ஆண்டு நவமபர் மாதம் ” காலைக்கதிர் ” எனும் பத்திரிகையை தொடக்கினார் . காலைக்கதிர் தொடக்க விழாவுக்கு கூட இரா் சம்பந்தன் , முதலமைச்சர் விக்கினேஸ்வரன் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் போன்ற அரசியல் பிரமுகர்களை அழைத்திருந்தார் . அதில் கலந்து கொண்டிருந்த முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், வித்தியாதரன் தன்னிடம் வந்து ” நான் தான் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் . என்னை நீங்க ஆதரிக்க வேண்டும் ” என்று கேட்டுகொண்டதாக கூறி வித்தியாதரன் முதலமைச்சர் கனவில் இருந்திருந்தார் என்பதை உறுதிபடுத்தினார் .

தனது பத்திரிகை மூலம் மக்கள் சார்ந்து கருத்துக்களை முன் வைப்பார், சிதறிக் கிடக்கும் தமிழ் தேசிய அரசியலை ஒன்றாக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு அவர் ஏமாற்றத்தையே கொடுத்தார் என்றே பின் வந்த நாள்களில் அவரின் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தி நின்றன .

தனக்கு ஆசனம் தராத தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பது பற்றிய சிந்தனைகளையே தனது எழுத்துக்கள் மூலம் கொண்டு வர தொடங்கினார். 2015 இல் தான் உருவாக்கிய ஜனநாயக போராளிகள் கட்சியை பின்னர் அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

“இனி இது ரகசியம் இல்லை ” என்கிற தலைப்பினூடாக தான் பிரத்தியேகமாக அறிந்த செய்திகளை வைத்து சில கற்பனைக்களையும் கலந்து கூட்டமைப்பை உடைக்கும் கட்டுரைகளை வரைந்தார் . அவர் கூட்டமைப்பை சிதைக்கும் கட்டுரைகளை வரைவது கூட , தனது தனிப்பட்ட கோபங்களுக்காக பழிவாங்க முற்படுகிறார் என்ற வகையில் கடந்து செல்லலாம் . ஆனால் சம நேரத்தில் அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் தாக்கி எழுதி வந்தார் .

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை இலக்கு வைத்து அவர் செய்திகள் எழுதி வந்தார். கூட்டமைப்பின் கனடா கிளையிலிருந்து செயல்பட்டு பின்னர் தனது சொந்த இடத்துக்கு திரும்பி அரசியலில் ஈடுபட்டு கொண்டிருந்த குகதாசனை சம்பந்தனின் “பதிலி ” என்று சொல்லி ஒரு கட்டுரை வரைந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

தன்னை ஒரு தமிழ் தேசியவாதியாக காட்டி கொள்ளும் ஒரு சில கட்டுரைகள் வரைந்த பொழுதும் , தேர்தல் காலங்களில் மக்கள் எதை நோக்கி நகர வேண்டும் என்கிற வகையிலான கட்டுரைகளை இவர் வரைந்திருக்கவில்லை. பிரிந்து நின்ற தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றாக்கும் பணியில் சில பொது அமைப்புகள் செயல்பட்ட பொழுதும் இவர் அதை ஊக்குவிக்கவோ அல்லது அவ்வாறான முயற்சியில் ஈடுபடவோ இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்று செயல்பட்டிருந்தவர்களில் ஒருவரான தாராகி சிவராமின் ஞாபகார்த்த பரிசு ஒன்றினை ஊடகவியலாளர் பரிசளிப்பு விழாவில் (2019 ) பெற்றிருந்த பொழுதும் அந்த விருதுக்கு ஏற்ற வகையில் இவரது எழுத்துக்களோ அல்லது செயல்பாடுகளோ அமைந்திருக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை ஆகும் .

இதற்கு இடையில் 2015 இல் தனது வெள்ளை வான் கடத்தல் பற்றி பதவி ஏற்றிருக்கும் புதிய அரசு விசாரிக்க இருப்பதாகவும் – அதில் தான் சாட்சி சொல்ல இருப்பதாகவும் ஊடகங்களுக்கு தானே பேட்டி கொடுத்தார். ஆனால் அந்த ஆட்சிகாலத்திலோ அல்லது அவர்களின் ஆட்சி காலத்தின் இறுதிகளில் வெள்ளை வான் கடத்தல் பற்றி அவர்கள் வெளியிட்ட செய்திகளிலோ இவரது கடத்தல் பற்றியும் வரவில்லை. இவரும் சாட்சி சொல்ல போயிருக்கவில்லை .

2018இல் நடைபெற்ற ஒக்ரோபர் புரட்சி என்றழைக்கப்படும் மகிந்த பிரதமரான செயலை கூட்டமைப்பு எதிர்த்த பொழுது இவர் கூட்டமைப்பை விமர்சித்தார். கூட்டமைப்பு தெரிவித்த கருத்துக்களை பொய்யானவை என்று தர்க்கிக்கும் கட்டுரைகளை எழுதினார் .

விடுதலை புலிகள் இருந்த காலத்திலேயே மகிந்தவுடன் வித்தியாதரனுக்கு (தொழில் சார் )உறவுகள் இருந்திருக்கின்றன . மகிந்த தரப்பிலிருந்து சில தகவல்கள விடுதலை புலிகளுக்கு வித்தியாதரனூடாக பகிரப்பட்டிருந்தன என்று அப்போதே சில ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்தன.

இவருக்கும் மகிந்தவிக்குமிடையிலான அந்த உறவை நிரூபிக்க கூடியதான ஒரு சம்பவம் 2019இல் நடைபெற்றிருந்தது. 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இவரது அறுபதாவது பிறந்த நாளுக்கு மகிந்த வந்து கலந்து கொண்டிருந்தார் . மகிந்த கலந்து கொண்டிருந்தது பற்றிய விமர்சனம் எழுந்த பொழுது 2010 இல் தமிழ் மக்கள் 48,000 வாக்குகள் மகிந்தவுக்கு போட்டிருந்தனர் என்று கூறி நியாயப்படுத்தினார் .

2020 தேர்தலில் தமிழ் அரசுக் கட்சிக்குள் நடந்த உள்ளக முரண்பாடுகளை மேலும் தூண்டி விடுவதற்காக சுமந்திரன் சார்பான நிலையெடுத்தார். மாவை சேனாதிராசாவைக் கடுமையாக விமர்சிக்கும் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்தார். எம்.ஏ. சுமந்திரன் விடுதலை புலிகளின் ஆயுத போராட்டம் பற்றி கூறிய கருத்துக்கள் தொடர்பாக எதிர்த்து நின்ற பொழுது ” சுமந்திரனின் விளக்கத்தை நாம் கேட்க வேண்டும் ” என்று அவருக்கு ஆதரவாக நின்றார்.

வித்தியாதரனின் உள் நோக்கம் தெரியாமலேயே எம்.ஏ. சுமந்திரனும் வித்தியாதரனுடன் நெருக்கமானார் . சுமந்திரனிடமிருந்து கிடைக்கப்பெறும் செய்திகளை அடிப்படையாக வைத்து மாவை சேனாதிராசாவுக்கு எதிரான பரப்புரைகளை முடுக்கிவிட்டார் . மேலால் சுமந்திரனையும் ஆங்காங்கே சில இடங்களில் விமர்சித்து வந்தாலும் அவரது சார்பு நிலையில் வித்தியாதரன் இருக்கிறார் என்பது அவரது எழுத்துக்கள் காட்டி நின்றன.

இந்த நிலையில்தான் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் வித்தியாதரன் பேசி இருந்தார். தமிழ் அரசுக் கட்சியின் கூட்டத்தில் வைத்தே தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவைக் கடுமையாக விமர்சித்திருந்தார். ” தமிழர் வரலாற்றில் முதல் தவறிழைத்த தமிழ் தலைவர் மாவை தான் ” என்று பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவை சேனாதிராசாவுக்கும் எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையில் இருந்த பனிப்போர் உச்சக்கட்டம் அடைந்தது. இவ்வாறு நடக்கும் என்று தெரிந்தே திட்டமிட்டு இதை வித்தியாதரன் செய்திருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மாவை சேனாதிராசா தோல்வியடைந்த பின்னரும் அவரைப் பழிவாங்கும் எண்ணங்களை ஊடகவியலாளர் வித்தியாதரன் கைவிட்ட மாதிரி தெரியவில்லை. தொடர்ச்சியாக மாவை சேனாதிராசாவின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார் . மாவை சேனாதிராசா செய்வது எல்லாம் சரியானது என்றோ அல்லது எம்.ஏ. சுமந்திரன் செய்வது எல்லாம் பிழையானது என்றோ நாம் இங்கே வலியுறுத்தவில்லை. ஆனால் வித்தியாதரன், சுமந்திரன் விடுகிற பிழைகளைச் சுட்டிக்காட்டாமல் தனியே மாவை சேனாதிராசா விடும் பிழைகளை சுட்டி காட்டி , அவர் தலைவர் பதவிக்கு லாயக்கற்றவர் என்ற வகையில் எழுதி வருகிறார் .

இவர் மக்கள் நலன் சார்ந்து , தமிழ் தேசியம் நலன் சார்ந்து இதுகளை எல்லாம் செய்கிறார் என்றால் அதை நாம் வரவேற்கலாம். ஆனால் அடிப்படை நேர்மை தன்மை இல்லாமல் , சொந்த நலன்களின் விருப்பு வெறுப்புகளுக்காக தமிழர்களின் ஒரு பாரம்பரிய கட்சி ஒன்றினை பிளவுபடுத்தும் அல்லது முற்றாக சிதைக்கும் வகையில் இவர் செயல்படுவதை நாம் தொடர்ந்து அனுமதிக்கமுடியாது என்பதால்தான் இந்த கட்டுரையை எழுகிறேன்.

இதில் கூறப்பட்டவை எல்லாமே உண்மையானவை ஆகும் . இது தொடர்பாக , தனக்கு அப்படி பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும் இதில் கூறப்பட்டவை பொய் என்றும் அவர் மறுக்கக் கூடும் . தனக்கு அரசியல் முனைப்பாடு இருந்திருக்கவில்லை என்றே அவர் மறுத்திருந்தவர் . ஆனால் இவற்றை மறுக்க முன்னர் அவரின் முன்னாலேயே அவரது கலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு விழாவில் வைத்தே முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தன்னிடம் வந்து வித்தியாதரன் பேசிய விடயத்தை போட்டுடைத்திருந்தார் என்பதை அவர் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

இந்தக் கட்டுரையானது ஊடகவியலாளர் வித்தியாதரன் மேல் குற்றம் சாட்டும் நோக்கிலோ அல்லது அவர் தேச விரோத சக்திகளுடன் கை கோர்த்து நிக்கிறார் என்பதை மக்களுக்கு எடுத்து காட்டுவதற்காக வரையப்பட்ட ஒன்றல்ல .

நடந்த சம்பவங்கள், உண்மைகள், அரசியல் மாற்றங்கள் எனவற்றை அப்படியே சொல்லி இருக்கிறோம் . சூழ்நிலை காரணமாக ஒரு சில விட்டுக்கொடுப்புகள், தளர்வுகள் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாதது என்பதை நாம் அறிவோம் .

ஆனால் தொடர்ந்து அதன் வழியே பயணிக்க நினைப்பதும் அதிலிருந்து வெளியே வர முயற்சிக்காமல் இருப்பதும் ஏற்று கொள்ள கூடியது அல்ல .

இதை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அவர் மீண்டும் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தும் ஊடகவியலாளராக பயணிக்க வேண்டும் .

இதனை கருத்தில் கொண்டே இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது . இந்த கட்டுரையில் உள்ள சந்தேகங்கள் அல்லது உண்மை தன்மை பற்றிய தெளிவுபடுத்தல்களை செய்ய நான் எப்பவும் தாயாராகவே இருக்கிறேன் .

நன்றி

யாழவன்