எம்.எம் பவுண்டேசன் புலமைப்பரிசில் திட்டத்துக்கு யாழ்ப்பாணம் பல்கலையில் 50 மாணவர்கள் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு எம். எம் பவுண்டேசன் (Mosvold-Martinus Foundation) நிதியத்தினால் ஏ.கே.ஓ புலமைப்பரிசில் (AKO Scholarship Fund ) திட்டத்தின் கீழ் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று (நவ. 30) திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது.

உள்நாட்டிலுள்ள தன்னார்வத் தொண்டு நிதியமான எம். எம் பவுண்டேசன் 2018ஆம் ஆண்டு முதல் ஏ.கே.ஓ புலமைப்பரிசில் திட்டத்தில் பங்குதாரராகச் செயற்பட்டு நாட்டிலுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், கலை, கலாசாரப் பணிகளுக்கும், காலநிலை மாற்றத்துக்கெதிரான செயற்பாடுகளுக்காகவும் உதவிகளைப் புரிந்து வருகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் தெரிவு செய்யப்படும் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 50 பேருக்கு முதற்கட்டமாக மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

இதன்படி, பல்கலைக்கழகத்துக்கும், எம். எம் பவுண்டேசன் நிதியத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன் ஆகியோரும், எம். எம் பவுண்டேசன் நிதியத்தின் சார்பில் அதன் முகாமைத்துவ அறங்காவலர் டி. நிமல் மரின்டஸ் மற்றும் அறங்காவலர் நிலங்கா மரின்டஸ் ஆகியோரும் ஒப்பமிட்டடனர்.

இந்த நிகழ்வின் போது யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் எஸ். ஐங்கரன், நிதியாளர் கே. சுரேஸ்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.