ஐந்தாவது ஆண்டில் உங்கள் முதல்வன்

உங்கள் முதல்வன் (muthalvannews.com) இணையப் பரப்பில் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறான்.

2018ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதியன்று முதல்வன் இணையப் பரப்பில் muthalvannews.com என்ற முகவரியில் வெளிவரத் தொடங்கினான்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நடத்தப்படும், ஒரு நிறுவனமல்லாத – கட்சிப் பின்னணி இல்லாத – அரசியல் கட்சிகள் சார்ந்து அளிக்கப்படும் நிதி உதவி எதுவுமில்லாத – அரசியல்வாதிகள் எவரது உதவியும் கட்டளையுமில்லாத – நிறுவனங்களின் பின்னணி நிதி உதவி எதுவுமில்லாத, செய்திகளின் தரமறிந்து சுவையறிந்து இயங்கிய பத்திரிகையாளரான தனிநபரால், ஊடகவியலாளர்களின் உதவியுடன் இயங்கும் செய்தித் தளமாக 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட முயற்சி இது.

இம் முயற்சி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு செய்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இடையில் எத்தனையோ சோதனைகள், தடங்கல்கள் ஏற்பட்ட போதும் இன்றுவரை நிமிர்ந்த நடையுடனும், நேர்கொண்ட பார்வையுடனும் முதல்வன் வெளிவருகிறான். தமிழின் சிறப்பியல்புகளை வெளிப்படுத்தும் வகையில் நம் முன்னோர் வகுத்த ஊடக தர்மத்தின் பாதையில் தற்கால அரசியல் சூழலுக்குத் தக்க முதல்வன் இயங்கி வருகின்றான்.

இன்றளவும், நாம் தொடங்கப்பட்ட போது கொண்டிருந்த அதே தர்ம சிந்தனையில் இருந்து விலகாமல், தளத்தை இயக்கி வருகிறோம். ஓர் இடத்தில் அமர்ந்திருந்து சகோதர இணையத்தளங்களின் செய்திகளை பிரதி செய்து பதிவேற்றுவதுமில்லை, இனியும் பதிவேற்றப் போவதுமில்லை. அந்தத் தனிச் சிறப்புடன் முதல்வன் எப்போதும் உங்களிடம் வெளிவருவான்.

இந்த 4 ஆண்டுகளில் நம் தளத்துக்காக எந்த எதிர்பார்ப்புமின்றி செய்திகளை, கட்டுரைகளை அனுப்பி ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நம் செய்திகளை சமூகத்தளங்களில் பகிர்ந்து முதல்வனின் வீச்சை உலகம் அறியும் படி செய்து உதவி வரும் வாசகர்களுக்கு பேரன்பு கலந்த நன்றிகள்.

இன, மொழி, மத, சமூக அடிப்படையில் அமையும் எல்லாவிதமான வெறுப்புகளையும் எதிர்த்துப் போராடுவதை தனது பணியாகக் கொண்டு அகவை 5இல் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில், வாசகர்களின் ஆதரவுடன் முதல்வன் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறான்!