ஐ.நா. கூட்டத்தொடரும்; தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும்

யாழவன்

ஐ. நா. மனித உரிமைகள் சபை 46ஆவது அமர்வில் இலங்கை மீது கொண்டுவரப்பட இருக்கும் தீர்மானமானது மிகவும் காத்திரமானதாகவும், அது தமிழ் மக்களுக்கு தீர்வு தர கூடியதாகவும் இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் உலகில் உள்ள தமிழர்களில் பெரும்பாலானோர் தங்களாலான முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறார்கள்.

சிலர் அதற்கு மேலாக பாதுகாப்பு சபைக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு போக வேண்டும் என்று முயற்சிகள் எடுத்து கொண்டிருக்கிறார்கள் . அந்த வகையிலேயே பிரிட்டனில் அம்பிகை செல்வகுமார் ” உணவு தவிர்ப்பு போராட்டம் ” ஒன்றை மேற்கொண்டிருக்கிறார் . 15 நாள்கள் கடந்தும் அதனைக் கைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார் .

அவரது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக தாயகத்திலும், அடையாள உணவுதவிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் , கோவிட்-19 முடக்க நிலை விதிகளை மீறி தமிழ் மக்கள் தங்களாலான போராட்டங்களை செய்து வருகிறார்கள் . தமிழகத்திலும் நேற்றுமுன்தினம் ( 12 /03 /2021 ) மக்கள் போராட்டம் ஓன்று இதற்காக நடத்தப்பட்டிருந்தது .

ஆஸ்திரேலியாவில் நேற்றைய தினம் ( 13 /03 /2021 ) மக்கள் போராட்டம் நடைபெற்றது . பிரிட்டனிலும் கனடாவிலும் இன்றைய தினம் ( 14 /03 / 2021 ) மக்கள் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் ஏற்க்கனவே கடந்த வாரமும் ஒரு போராட்டம் நடத்தப்பட்டிருந்தது .

தாயகத்தில் அண்மையில் மிக பெரும் எழுசியுடன், தமிழ் முஸ்லீம் மக்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) போரட்டம் கூட ஐ நா வில் தமிழ் மக்களிற்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வலியுறுத்தியிருந்தது .

இது எல்லாவற்றுக்கும் மேலாக புலம்பெயர் மற்றும் தமிழக தமிழ் மக்களின் அமைப்புகள் எல்லாம் பல்வேறு zoom மூலமான கூட்டங்களை நடத்தி , தமிழர் தரப்பு நியாயங்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்து வருகின்றன . அரசியல் கட்சிகளும் , சிவில் சமூக அமைப்புகளும், மத குருமார்களும் கடிதங்கள் மூலம் தமிழர் தரப்பு நியாயங்களை ஐ.நாவின் மனிதவுரிமை ஆணையாளருக்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு இந்த பூமி பந்தில் பரந்து வாழும் தமிழர்கள் அனைவருமே (பெரும்பாலும் ) ஒரே நோக்கில் , கிட்டத்தட்ட ஒரே விடயங்களை வலியுறுத்தி போராடி வருவதும் , ஒரு அம்மா தனது உயிரை விடக்கூட முன் வந்திருப்பதும் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கிலேயே .

இந்த எல்லாவகை போராட்டங்களாலும் எதுவும் உடனடியாக நடக்கவில்லை என்று கூறுவதும், உடனடியாக நடந்து விடாது என்று கூறுவதும் ஓரளவுக்கு உண்மையாயினும் எதுவுமே பெற்று தாராது என்கிற முடிவுக்கும் வந்துவிட முடியாது.

மக்கள் போராட்டங்களும் , தொடர்ச்சியான அழுத்தங்களும் என்றோ ஒரு நாள் வெற்றியை பதிவு செய்தே தீரும். ஏன் இப்ப கூட பிரிட்டன் ஏற்கனவே கொடுத்திருந்த வரைபை மாற்றியமைக்க முன் வந்திருக்கிறது. பிரிட்டன் மாற்றியமைக்க இருக்கும் வரைபே இறுதி தீர்மானமாக வரும். அந்த தீர்மானம் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் நிறைவு செய்ய கூடியதாக வராது என்றாலும் கூட முதலில் இருந்த வரைபை விட ஓரளவுக்கு முன்னேற்றகரமானதாக இருக்கும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது .

பிரிட்டன் இந்த மாற்றத்துக்கு தயாரானத்துக்கு பின்னால் மேற்கூறப்பட்ட உலக தமிழ் மக்கள் அத்தனை பேரின் முயற்சிகளும் காரணமாக அமைந்திருந்தன என்று சொன்னால் அது மிகையாகாது.

இவ்வாறு தமிழ் மக்கள் ஒரு பக்கத்தால் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு உலக நாடுகள் வர வேண்டும் என்று முயற்சிகள் செய்கிறார்களோ, அதே போல சிங்கள மக்களும் “இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் வரக்கூடாது” என்பதற்காக முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் தமிழர்கள், தமிழ் அமைப்புகள் அளவுக்கு சிங்களவர்களோ அல்லது சிங்கள அமைப்புகளோ இல்லையாயினும் கூட இருக்கும் சிங்கள அமைப்புகள் காத்திரமான பல நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.

” குறிப்பாக சிங்கள கற்றறிந்தவர்கள் இந்த சிங்கள அமைப்புகளோடு கை கோர்த்து நிற்கிறார்கள். அவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு பல கற்றறிந்தோரைத் திரட்டி இலங்கை அரசுக்கு சார்பாக , ஆணித்தரமான ஆவணப்படுத்தல்களுடன் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

இலங்கை அரசு ஒரு பக்கத்தால் தனக்கு ஆதரவாக நாடுகளை திரட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதே சம நேரத்தில் இந்த புலம்பெயர் சிங்கள அமைப்புகளும் அதற்கு வலு சேர்க்கும் விதமாக தங்கள் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருக்கிறார்கள் .

போர் முடிந்து முழுமையாக 10 ஆண்டுகள் முடிவடைந்தும் கூட போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தேவையான மீள் கட்டுமானங்கள், நல்லிணக்கம், பொறுபு கூறல் என்பவை தொடர்பாக எந்தவித காத்திரமான நடவடிக்கையும் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படாததால் உலக நாடுகள் பல அது தொடர்பாக அதிருப்தியில் இருக்கும் இந்த நிலையில், தங்களுக்கு சார்பாக உலக நாடுகளை திரும்புவதில் பல சவால்களை சந்தித்து கொண்டிருக்கின்றது இலங்கை அரசு.

இந்த நிலையில் உண்மையாக தமிழ் மக்களுக்கு தேவையானது “பொறுப்பு கூறல், மீள் கட்டுமானங்கள், நல்லிணக்கம்” என்பவை அல்ல. அவர்களுக்கு தேவையானது ” ஒரு வசதியான வாழ்க்கையே” என்று கூறி வருவதுடன் இதுவரை விடப்பட்ட காணிகள் எல்லாம் தங்கள் நல்லிணக்க முயற்சிதான் என்று கூறி அரசு வருகிறது. தாங்கள் விட்ட காணிகளில் கூட இன்னமும் மக்கள் குடியமரவில்லை, தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் வாசிக்க விரும்பாமல் தெற்கு நோக்கி வருகிறார்கள் என்பதையும் கூறி வருகிறது.

இதனை ஆதாரங்களோடு நிரூபிக்கும் விதமாகவும் , புலம்பெயர்ந்து போய் பல ஆண்டுகளாக திரும்ப வராமல் இருக்கும் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை அடையாளம் கண்டு கையகப்படுத்தும் நோக்கிலும்தான் தமிழர்களின் பலத்த எதிர்ப்புகளின் மத்தியிலும் அவசரம் அவசரமாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இயங்கி வந்த வடமாகாண காணி சீர்திருத்த அலுவலகம் அநுராதபுரத்துக்கு இரவோடு இரவாக மாற்றியுள்ளார்கள் என்று அரசியல் அவதானிகள் கருத்துரைக்கின்றனர்.

இதை எல்லாம் சிங்களவர்களே சொன்னால் உலக நாடுகள் நம்ப போவதில்லை என்று தெரிந்து கொண்டே தங்களோடு டக்ளஸ் தேவானந்தா, கருணா, வியாழேந்திரன், அங்கஜன் போன்றோரை வைத்துள்ளது இலங்கை அரசு.

இலங்கை அரசு விரும்புவது போலவே அவர்களும் அரசியல் தீர்வு அப்பால் சென்று அபிவிருத்திதான் முக்கியம் என்று கூறி வருகிறார்கள் . ஆயிரம் நாள் தாண்டியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிக்காக போராடி கொண்டிருக்கும் தமிழ் மக்களின் போராட்டங்களையே கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.

இவர்கள் தங்கள் அரசியல் பதவிகளுக்காக, தங்கள் சுக போக வாழ்க்கைக்காக இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று உலக நாடுகளுக்கு தமிழ் மக்கள் சார்பாக இயங்க கூடிய அமைப்புகள் சொல்லி தங்கள் தரப்பு நியாயங்களை வலுவாக முன்வைக்கலாம். இது இலங்கையின் அரசுக்கும், இலங்கை அரசுக்க்கா இயங்கும் அமைப்புகளுக்கும் தெரியும் . இதனால்தான் அவர்கள் தற்பொழுது மாற்று வழிகளையும் கையாள தொடங்கியுள்ளார்கள்.

வெறுமனவே அரசியல் கட்சிகள் மட்டும் சொல்லவில்லை, தமிழ் மக்கள் சார்பான சிவில் அமைப்புகள் , தமிழ் மக்களின் கற்றறிந்தவர்கள் அதையே சொல்கின்றனர் என்றும் காட்ட முனைகிறார்கள். அதற்காகவே அருண் சித்தார்த்தன் போன்றோரை சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதியாக முன்னிலை படுத்தி சிங்கள ஊடகங்களில் காட்டி வருகிறார்கள் .

கடந்த சில ஆண்டுகளாக அருண் சித்தார்த் தமிழ் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதியாக தன்னை காட்டி , தமிழ் மக்களின் நியாமான கோரிக்கைகளை எல்லாம் கொஞ்சப்படுத்தி, தமிழ் இன விரோத கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் .

அந்த வகையில் இந்த அருண் சித்தார்த்தை அழைத்து ஒரு zoom கலந்துரையாடலை செய்தது கனடாவில் இயங்கும் அமைப்பான “Ontario Centre for Policy Research ” எனும் அமைப்பு . இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் , தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் புலம்பெயர் சிங்கள அமைப்பில் குறிப்பிட்டு சொல்ல கூடிய அமைப்பாக இயங்கி வரும் அமைப்பே இந்த ” Ontario Centre for Policy Research” என்கிற அமைப்பு ஆகும்.

இந்த அமைப்பு கடந்து வந்த ஒரு வருடத்தில் மட்டும் பல நூற்றுக்கணக்கான ஆவணங்கள் , கடிதங்கள் போன்றவற்றை இலங்கை அரசுக்கு சார்பாக ஐ நா ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளது . குறிப்பாக பிரிட்டன் நீதிமன்று ஒன்றில் விடுதலை புலிகளை பயங்கரவாத தடையில் நீடித்து வைத்திருப்பது பிழையானது என்று வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பல நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தது.

கடந்த மாதம் அதாவது பெப்ரவரி 23ஆம் திகதி ஐ நாவின் மனிதவுரிமை ஆணையாளருக்கு ” போரின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் ” Report of the Post-conflict Accountability and Reconciliation on Sri Lanka
(ARSL) ” என்கிற தலைப்பிலான அறிக்கை ஒன்றை கூட சமர்ப்பித்து இருந்தது .

இவ்வாறு இலங்கை அரசை காப்பற்ற முயலும் அமைப்பானது , அருண் சித்தார்த்தை மையப்படுத்தி , அதுவும் ஐ நா வின் மனித உரிமைகள் சபை கூட்ட தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வைத்த இந்த zoom கலந்துரையிடலும் அதே நோக்கத்தை கொண்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கப்போவதில்லை . ஆனால் இதில் வெறும் அருண் சித்தார்த் மட்டும் கலந்து கொண்டிருக்கவில்லை. அருண் சித்தார்த்தோடு ” யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இயங்க கூடிய கழகமொன்றின் நிறுவுனர் “என்கிற அடையாளப்படுத்தலுடன் ஹரிஷ் கோவிந்தா என்கிற இலங்கை அரசின் விமானப்படை சிப்பாயும் கலந்து கொண்டிருந்தார் .

இவர்கள் இருவரும் மட்டுமே கலந்து கொண்டிருந்தால் , இந்த கட்டுரை எழுத வேண்டிய தேவையே இருந்திருக்காது . இவர்கள் இருவரோடும் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்க கூடிய கற்றறிந்த ஒருத்தரும் கலந்து கொண்டிருந்தார் . தமிழ் மக்களிடையே இருக்கும் கற்றறிந்தவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது தார்மீக கடமையாகும் .

அவ்வாறு தமிழ் மக்கள் சார்ந்து குரல் கொடுப்பது தங்கள் உயர் பதவிகளுக்கு ஆபத்தாக அமையும், அல்லது தங்கள் கௌரவத்துக்கு பங்கமாக அமையும் என்கிறதன் அடிப்படையில் அவர்கள் குரல் கொடுக்காமல் இருப்பதை கூட நாம் ஏற்று கொள்ளலாம். ஆனால் தமிழ் மக்களின் நியாமான கோரிக்கைகளை நீத்துப்போகக்கூடிய வகையில் , பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அத்தனை பேரின் கண்ணீர்களையும் கொச்சைப்படுத்த கூடிய வகையில் , ஒட்டு மொத்த தமிழினமே ஒரு பக்கமா தமிழ் மக்கள் சார்ந்து இலங்கை அரசுக்கு போராடி கொண்டிருக்க அதற்கு எதிராக இலங்கை அரசுக்கு வலு சேர்க்கும் விதமாக நடத்தப்பட்ட கலந்துரையாடலில் குறிப்பிட்ட கற்றறிந்தவர் கலந்து கொண்டது தமிழ் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியிருந்தது .

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏன் நாட்டிலேயே சிறந்த கண் சத்திரச்சிகிச்சை வல்லுநர் என பெயர் பெற்ற மருத்துவ வல்லுநர் முத்துசாமி மலரவன்தான் அந்த குறிப்பிட்ட கற்றறிந்தவர் ஆவார்.

மிகச் சிறந்த கண் சத்திரச்சிகிச்சை வல்லுநராக விளங்கும் முத்துசாமி மலரவனின் மனைவியின் தந்தையார் கூட காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர்தான். கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தராக செயல்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பேராசிரியர் இரவீந்திரநாத் இன் மருமகனே இவர் ஆவார் . குறிப்பிட்ட காலம் வரை காணாமல் ஆக்கப்பட்ட தனது மாமனுக்காக போராடி பின்னர் ” அவர் இறந்து விட்டார் ” என்கிற முடிவை எடுத்து ( எடுக்க வைக்கப்பட்டார் ) சமாதானமாகி , சாதாரணமாக தன்னுடைய மருத்துவ சேவையைச் செய்து வருபவர் .

இவ்வாறு பாதிக்கப்பட்டவராக இருந்தும் கூட, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று இதுவரை எந்த கருத்துக்களையும் முன்வைத்தவர் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட எந்தவித ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டது இல்லை . இவர் மட்டும் அல்ல பலர் அவ்வாறுதான் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு இருப்பது கேள்விக்குட்படுத்த முடியாது. ஆனால் அவ்வாறு இருப்பவர்கள் ” தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாட்டுக்கு அதுவும் பாதிக்கப்ட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராக செய்லபட முனைவது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.

தங்கள் மத்தியில் சிறந்து விளங்கும் கண் சத்திரச் சிகிச்சை வல்லுநராக இருக்கும் மலரவனை மக்கள் கடவுளாகக் கூட பார்ப்பதுண்டு .

இவ்வாறான ஒருவர் சிங்கள அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டதை கூட நாம் கடந்து சென்றுவிடலாம். ஏனெனில் சிங்கள மக்களிடையே நல்ல பெயர் எடுக்க வேண்டும் – ஏற்படுத்த கூடிய வகையில்தான் அவர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் . ஆனால் அவர் அந்த கலந்துரையிடலில் முன்வைத்த கருத்துக்களை நாம் அவ்வாறு கடந்து செல்ல முடியாது .

கடந்த 7 ஆம் திகதி , ” ஐ நாவில் தமிழருக்கான நீதியும் , தமிழ் மக்களிற்கு உண்மையில் தேவையானது என்ன ” என்கிறதுமான தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் மருத்துவ வல்லுநர் மலரவன் அவர்கள் முன் வைத்த சில கருத்துகளை அடிக்கோடிட்டு காட்டி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

  • தமிழருக்கான நீதி அல்லது நல்லிணக்கம் என்பதை நான் ஏற்று கொள்ளவில்லை. ஏனெனில் இங்கே தமிழர்கள் என்பது மூன்று பிரிவாக உள்ளார்கள். அந்த மூன்றில் இரண்டு பகுதியினர் சிங்களவர்களுடன் நல்லிணக்கமாகவே வாழ்கிறார்கள். (ஆனால் அவர் பிரித்த மூன்று பகுதிக்குள் மலையகத்தில் வாழும் தமிழர்கள் வரவில்லை . அவர்களை அவர் கணக்கிலும் எடுக்கவில்லை )
  • வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாழ விரும்பவில்லை. தற்பொழுது வாழ்பவர்கள் கல்வியறிவு அற்றவர்கள் அல்லது வெளிநாட்டு தொடர்பு இல்லாதவர்கள்.
  • காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கை உண்மையானது இல்லை . எனக்கு தெரிந்து என்னிடம் ஒருவர் வந்து காணாமற்போயுள்ளார் என்று கடிதம் கேட்டார். ஆனால் கேட்டவரின் மகன் வெளிநாட்டில் இருந்தார். ( தமிழ் மக்கள் சொல்லும் காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கை பிழையானது என்கிறார் )
  • நானும் ஒரு பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன்தான் . இன்னும் அதிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. ஆனால் நான் ஒரு முடிவை ஏற்றுக்கொண்டுவிட்டேன். ( அதே மாதிரி மற்றவர்களையும் ஏற்று கொள்ள சொல்லி மறைமுகமாக சொல்கிறார் )
  • இதுவரை நாம் முன்னெடுத்த தேசிய போராட்டங்கள் மற்றும் கொள்கைகள் எல்லாம் தோற்றுவிட்டன . எனவேதான் வேறு வழிகளிகள் நாங்கள் அந்த வகையில் போக்குவரத்து மற்றும் மொழிகளுக்கிடையிலான இடைவெளிகளை குறைக்க வேண்டும். ( இது தான் தமிழ் மக்களுக்கு தேவையானது என்கிறார்)
  • இலங்கையில் போர் ஏற்பட்டது முரண்பாடுகளால் . ஆனால் முரண்பாடுகள் தீர்க்கப்ட்ட பின்னும் கூட ( போர்தான் முடிந்துள்ளது . முரண்பாடுகள் அல்ல. ஆனால் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டது என்கிற கருத்தினை முன்வைக்கிறார் )

மேற்படி கருத்துக்களை தமிழ் மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் கற்றறிந்தவர் என்கிற அடிப்படையில், தமிழ் மக்களுக்கு தேவையானது இதுதான் என்கிற வகையில் வலியுறுத்தி இருந்தார்.

அவர் கூறிய மூன்று வகை தமிழர்களில் மூன்றாவதாக உள்ள தமிழர்களால்தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) எனும் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த மக்கள் போராட்டத்தில் முன் வைத்த எந்த ஒரு தேவையை பற்றியோ கதைத்திராத மருத்துவ வல்லுநர் என்ன அடிப்படையில் ” இது தான் தமிழ் மக்களுக்கு தேவையானது ” என்று கூறுகிறார் ??

ஆயிரம் நாள்களாக வீதியில் இறங்கி போராடும் மக்களினால் முன் வைக்கப்படும் நியாயமான கோரிக்கையைக்கைகளில் உள்ள உணர்வுகளை வலியுறுத்தாத அவர் என்ன அடிபப்டையில் , இது தான் தமிழ் மக்களுக்கு தேவை என்று கூறுகிறார் ??

எது எப்படியோ ” நான் ஒரு அரசியல் வாதியோ அல்லது அரசியல் கட்சி சார்ந்தவனோ அல்ல ” என்கிற அறிமுகத்தோடு அவர் பேசியிருந்த போதிலும் அவர் கலந்து கொண்ட அந்த கூட்டம் அரசியல் நோக்கம் கொண்டதே . அதுவும் தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு கொண்ட கூட்டம்.

தமிழர்களிடையே வாழ்ந்து கொண்டு, அவர்களின் வேணாவாக்களையும் கோரிக்கைகளையும் மதிக்காமல் அதற்கு எதிராக செய்லபடுவது அவர்களுக்கு செய்யும் துரோகமே !!

இவ்வாறான நடவடிக்கைகளை இவர்கள் போன்ற கற்றறிந்தவர்கள் நிறுத்த வேண்டும் . சிங்கள கற்றறிந்தவர்கள் சிங்கள தேசியத்துக்கு உழைப்பது போன்று தமிழ் தேசியத்துக்காக உழைக்காவிட்டாலும் பரவாயில்லை . ஆனால் தமிழ் தேசிய விரோத சக்திகளோடு கை கோர்க்காமல் இருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.