கஞ்சா கடத்தலில் சந்தேகநபர்களை விடுவிக்க பொலிஸாருக்கு அழுத்தம் – விளக்கமளிப்பாரா ஜனாதிபதி சட்டத்தரணி?

சமூக ஊடகங்களில் இன்று பரவலாக பேசப்படும் விடயமாக சண்டே ரைம்ஸ் ஆங்கில வார ஏட்டில் வெளியாகிய பத்தி எழுத்தாக அமைந்துள்ளது.

கஞ்சா போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பொலிஸாரைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் தமது கட்சி ஆதரவாளர்கள் என்று தெரிவித்து அவர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸாருக்கு கட்டளையிட்டார் என்ற விடயமே அந்தப் பத்தி எழுத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

- Advertisement -

வடக்கில் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்க இயங்கும் பொலிஸ் பிரிவுகளில் ஒன்றான கிளிநொச்சி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழான போதைத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து கஞ்சா போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களின் விநியோகம் இடம்சுற்றி வளைக்கப்பட்டது.

கடல் வழியாக எடுத்துவரப்படும் கஞ்சா போதைப்பொருள் அங்கு பொதி செய்யப்பட்டு தென்னிலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுவதாக பொலிஸ் சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டது.

அதன்போது அங்கிருந்தவர்கள் பொலிஸாரைத் தாக்கினார்கள் என்றும் பொலிஸ் சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும் மீட்கப்பட்ட கஞ்சாவின் அளவு மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விவரம் அந்தப் பத்தி எழுத்தி தெரிவிக்கப்படவில்லை.

கைது செய்யப்பட்டவர்களை எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் ( பளை பொலிஸ் நிலையம் உள்பட) ஒப்படைக்காது கிளிநொச்சிக்கு அழைத்து வருமாறு மூத்த பொலிஸ் அதிகாரியால், சிறப்புப் பொலிஸ் பிரிவுக்கு கட்டளையிடப்பட்டது.

அதனடிப்படையில் சந்தேகநபர்கள் கிளிநொச்சிக்கு அழைத்துவரப்பட்டதன் பின்னர் அவர்கள் மீது கஞ்சா போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு மற்றும் பொலிஸாரின் கடமையைத் தடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைத்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கிளிநொச்சி மூத்த பொலிஸ் அதிகாரிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய புள்ளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சந்தேகநபர்கள் தமி்ழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதாரவாளர்கள் என்றும் அவர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து உடனடியாக விடுவிக்குமாறும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

சந்தேகநபர்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியின் உறவினர் என்று அந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சண்டே ரைம்ஸில் வெளியாகிய இந்த தகவலை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு ஊடகங்கள், பின்னணி என்ன என்ற தலைப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால்தான் இந்த அழுத்தம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது என மறைமுகமாகச் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகள் அரசியல்வாதிகளினதும் ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட பண பலம் உள்ளவர்களினது தலையீட்டால் மூடிமறைக்கப்படுகின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஹோட்டல் உரிமையாளரைப் பிடித்தால் எந்தப்பெரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும் பொலிஸ் மா அதிபர் மூலம் விடுவிக்க முடியும் என்ற நிலை தற்போதும் உள்ளது.

இவ்வாறு இருக்கையில் இந்த விடயத்தை ஊடகத்துக்கு வெளிக்கொண்டு வந்ததன் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சம்பந்தப்பட்டிருப்பதே காரணமாகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டால் சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்தாமல் விடுவிக்கலாம் என்ற வரையறை பொலிஸாருக்கு இல்லை.

பெரும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவது பொலிஸாரின் கடமையாகும்.அத்துடன் இந்தச் சம்பவத்தில் பெருமளவு போதைப்பொருள் சந்தேகநபர்களிடம் இருந்தது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவ்வாறாயின் சந்தேகநபர்கள் மேல் நீதிமன்றின் கட்டளையிலேயே பிணையில் விடுவிக்க முடியும்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்தியதன் பின்னர் அவர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பில் பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காது விட்டிருக்க முடியும். ஆனால் நீதிமன்றில் சந்தேகநபர்களை முற்படுத்தாமல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தத்துக்கு அமைய அவர்களை பொலிஸார் விடுவித்துவிட்டு அதனை தற்போது வெளிக்கொண்டுவருவதன் மூலம் அரசியல் பின்னணி இருப்பது புலனாகின்றது.

இந்தச் சம்பவத்தையடுத்து பாதுகாப்பு அமைச்சின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தீர்மானித்துள்ளார் என்றும் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களம் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ்தான் உள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடாக முன்னெடுக்க அவர் தீர்மானித்துள்ளதானது முப்படைகளையும் ஒன்றிணைத்த ஒரு பிரிவின் கீழானதா? என்ற விளக்கமில்லை.

ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன், இந்த விடயத்தில் பொலிஸாருக்கு நேரடியாக அழுத்தம் வழங்கியமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதை அவர் தடுப்பது அரசியல்வாதிக்கு அப்பால் ஜனாதிபதி சட்டத்தரணி என்ற பெரும் கௌரவத்துக்கு தவறான அணுகுமுறையாகும்.

இதுவிடயத்தில் அவர் தனது விளக்கத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது இந்தக் குற்றச்சாட்டை பொலிஸார் முன்வைத்துள்ள நிலையில் அதற்கான விளக்கத்தை வழங்கும் பொறுப்பும் அதன் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு உண்டு.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!