கட்டட மூலப்பொருள்களின் விலையேற்றத்தினால் சிறு ஒப்பந்தக்காரர்கள் பாதிப்பு

கட்டட மூலப்பொருள்களின் விலையேற்றத்தினால் பதிவுசெய்யப்பட்ட சிறு ஒப்பந்தக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் விலைவாசியேற்றம் காரணமாக சீமெந்து, கம்பி உள்ளிட்ட கட்டட மூலப்பொருள்களுக்கும் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் அரச வேலைகளின் உடன்படிக்கைக்கு அமைய ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு இந்த அசாதாரண விலையேற்றத்துக்கு ஈடுசெய்யக் கூடியதாக இல்லை.

இந்த நிதி இழப்புத் தொடர்பில் ஒப்பந்தக்காரர்களினால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுகின்ற போதும் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீறி கொடுப்பனவை வழங்க முடியாது என்ற நிலையில் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்த நிலமையானது வடக்கு- கிழக்கில் உள்ள சிறு ஒப்பந்தக்காரர்கள் தமது சேமிப்பையும் இழந்து வங்கிகளில் எடுக்கப்பட்ட கடனையும் மீளச் செலுத்த முடியாத நிலையேற்படும் என்று பாதிக்கப்பட்டவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து ஒப்பந்தக்காரர்களையும் தொழில் வழங்குநர்களையும் கொண்டுவரவேண்டிய நிலை ஏற்படும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே மாகாண ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள், மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய உயர்மட்டத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்று எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பெரும் பின்னடைவை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிறு ஒப்பந்தக்காரர்களுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.