காதலர் தினத்தை முன்னிட்டு கஞ்சா கலந்த சொக்லேட் வெளியிடப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
கஞ்சா கலந்த சொக்லேட்களை தயாரித்து வெளியிட்ட நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆயுர்வேத திணைக்களத்தின் வைத்தியர் பி.தரங்க தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அவர் தெரிவித்ததாவது;
கஞ்சா கலந்த சொக்லேட்டுகள் காதலர் தின சந்தைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. பல சமூக ஊடக விளம்பரங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஆயுர்வேத திணைக்களத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சொக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தை கொண்டாடும் இளைஞர்களை குறிவைத்து பல ஊக்குவிப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சமூக ஊடகத் தளங்கள் மூலம் ஆயுர்வேதப் பெயரைப் பயன்படுத்தி ஆயுர்வேதமற்ற மருந்தை விளம்பரப்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் நெறிமுறையற்றது.
நாட்டின் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் கஞ்சாவின் மருத்துவ பயன்பாட்டிற்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கும் நேரத்தில், கஞ்சாவின் மருத்துவ குணங்களை மக்கள் பெறுவதற்கான வாய்ப்பைத் தடுத்து அமைதியை பேரழிவாக மாற்ற இதுபோன்ற பரப்புரைகள் செய்யப்படுகின்றன.
குறிப்பாக ஆயுர்வேதத்தின் பெயரைக் குறிப்பிடும் போது கஞ்சா அடங்கிய உணவுப் பொருளை உற்பத்தி செய்வதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் முன் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும்.
புதிதாக தயாரிக்கப்படும் மருந்து அல்லது உணவு ஆயுர்வேத திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட சூழ்நிலையில் கூட, அதை குழுவுக்கு சமர்ப்பித்து மீண்டும் ஒப்புதல் பெற வேண்டும். விளம்பரத்திற்கு மற்றொரு அனுமதி பெற வேண்டும்.
ஆயுர்வேதத்திற்கும் சொக்லேட்டுகளுக்கும் உள்ள தொடர்பை நாங்கள் காணவில்லை. சொக்லேட்டை மருந்தாகப் பயன்படுத்துவதில்லை. எனவே, இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – என்றார்.