காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்த வந்த 60 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
வயோதிபர் கடந்த சனிக்கிழமை முதல் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரை கோவிட் -19 நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது.


எனினும் அவர் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் குறிப்பேட்டின் படி குருதியின் அளவு அதிகளவு குறைந்ததால் உயிரிழந்துள்ளார்.
அவரது இறப்புத் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனையை செய்வதா? அல்லது பிசிஆர் பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னர் உற்கூற்றுப் பரிசோதனையைச் செய்வதா? என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.
இரண்டாம் இணைப்பு
பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அவரது உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இந்த உயிரிழப்புத் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி, பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளார்.