கோரோனாவும் தற்கொலைகளும்

சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை

நாட்டில் கோரோனா தொற்றுநோயின் உச்சதாண்டவம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 3 ஆயிரம் பேர் பிசிஆர் பரிசோதனை மூலம் கோரோனா நோயாளிகள் ஆக இனம் காணப்படுகின்றனர்.மேலும் சராசரியாக 40 பேர் இறந்து கொண்டிருக்கின்றனர்.

இது தவிர கோரோனாவினை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடு, தொழில் இன்மை மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள், கோரோனா நோய்ப்பரவல் செயற்பாடுகள் மூலம் பலர் தீவிர மன உளைச்சல்களுக்கு உள்ளாகிய நிலையில் தவறான முடிவெடுத்து தமது உயிரைத் துறக்கின்றனர்.

இத்தகைய செய்திகள் பெரும்பாலும் பத்திரிகைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ வருவதில்லை. அவ்வாறு செய்தியாக வந்தாலும் தற்கொலைக்கு என்ன அடிப்படை காரணம் என்பது பற்றி தெரிய வருவதில்லை.

மருத்துவர்களும் இது பற்றி அலட்டிக் கொள்ளவதில்லை. அவர்கள் பெரும்பாலும் நேரடியாக கோரோனா நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டே நோய் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது பற்றி விவாதிப்பார்கள். ஆனால் ஓட்டுமொத்தமாக கோரோனாவினால் ஏற்படும் விளைவுகளைக் கருத்தில் கொள்ளும் பொழுது இவ்வாறு ஏற்பட்ட உயிரிழப்புகளையும் நிச்சயம் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

வடமாகாணத்தில் கடந்த சில மாதங்களில் கோரோனா பயணத்தடை நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட சில தற்கொலை உயிரிழப்புகள் தொடர்பான விவரங்கள் வருமாறு;

 1. 36 வயதான மீன் வியாபாரி ஒருவர் தனது வியாபார நடவடிக்கைகளுக்காக கொள்வனவு செய்த வாகனத்திற்குரிய லீசிங் கட்டணத்தினை முழுமையாக செலுத்தாததினால் மன உடைவிற்கு உள்ளாகி இருந்தார். அண்மைக்காலமாக குறித்த நபர் மதுவுக்கு அடிமையாகிய நிலையில் இருந்தார்.
 2. கோரோனா தோன்றிவிடும் என்ற காரணத்தினால் பேரப்பிள்ளையினை வீதியில் கொண்டு உலாத்தி வருவதற்கு மகன் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக மனம் உடைந்த பேரனார் தற்கொலை செய்து கொண்டார்.
 3. தனிமையில் வசித்த 5 பிள்ளைகளின் தந்தையார் (இவரின் 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் உள்ளனர் ) தனது கடைசி மகள் கடந்த சில நாள்களாக தொலைபேசியில் கதைக்கவில்லை என்பதாலும், கடைசியாக கதைக்கும் பொழுது மகள் வேலை பார்க்கும் கம்பனி கோவிட்-19 நோய் பரவல் காரணமாக அவரை வேலையில் இருந்து நிறுத்தி இருப்பதாகவும் கூறியதால் மிகவும் மனம் உடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
 4. மனநோயாளி ஒருவர் பயணத்தடை காரணமாக வெளியேறி உலாத்த முடியாமையினால் தற்கொலை செய்துகொண்டார். இவர் வழமையாக பல்வேறு இடங்களுக்கு சென்றுவருவதையே பொழுதுபோக்காகக் கொண்டவர்.
 5. மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் அவை கிடைக்காமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

மேற்குறித்த சம்பவங்களில் இருந்து கோரோனா நோய் எவ்வாறு தற்கொலைக்கு வழிவகுக்கின்றது என்பது பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக சில மனிதர்களே இவ்வாறு தற்கொலை செய்கின்றனர் அல்லது செய்ய முயற்சிக்கின்றனர். இவர்கள் “அதிக ஆபத்தானவர்கள் (High risk persons for suicide )” என வகைப்படுத்தபடுவர். இவர்கள் யாரெனில் குறித்த பயணத்தடை மற்றும் தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் தற்கொலை செய்ய அதிக சாத்தியம் உள்ளவர்களே.

யார் அதிக ஆபத்தானவர்கள்

 1. போதைப்பொருள் மற்றும் மதுபானத்திற்கு அடிமையானவர்கள்
 2. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மன நோயாளிகள்
 3. பயணத்தடை மற்றும் தனிமைப்படுத்தல் காரணமாக தொழில் மற்றும் வருமானத்தினை இழந்தவர்கள்
 4. சிறப்புத் தேவையுடையவர்கள் போன்ற மற்றையவர்களில் முற்றுமுழுதாக தங்கி வாழ்பவர்கள்.
 5. பெற்ற பிள்ளைகள் புலத்தில் வசிக்கும் நிலையில் ஈழத்தில் தனிமையில் உள்ள பெற்றோர்.
 6. அதிகளவு குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள்.
 7. தொழில் ரீதியாக அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சுகாதார சேவை ஊழியர்கள்.
 8. கோரோனா நோயின் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்தவர்கள்.
 9. கோரோனா நோய் தனக்கு அல்லது குடும்பத்தினருக்கு வந்துவிடுமோ என அதீத பயம் கொண்டவர்களும் நோய் வந்தமை காரணமாக உறவினர்களாலும் சமூகத்தினாலும் ஒதுக்கப்படுபவர்கள்.
 10. லீசிங் மற்றும் ஏனைய கடன்களை செலுத்த முடியாதவர்கள்.
 11. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “சமூக இடைவெளி” ” முக கவசம் அணிதல்”… போன்ற கோரோனா தடுப்பு நடவடிக்கைகளினால் அதீத மன உளைச்சலுக்கு உள்ளாபவர்கள்.
 12. கோரோனா பெரும் தொற்று காரணமாக தமது திருமணம், பரீட்சை போன்ற முக்கியமான நிகழ்வுகளை இடைநிறுத்தியவர்கள்.
 13. தாய் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கி தவிப்போர்.
  எனவே இவ்வாறன தற்கொலை செய்ய அதிகம் சாத்தியக்கூறு கொண்ட மக்களின் பிரச்சனைகளை நாம் அன்போடும் பரிவோடும் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும். அத்துடன் மேற்குறித்த மக்களுக்கு எம்மால் ஆன உதவிகளை வழங்கலாம் அல்லது உதவி பெறும் வழிமுறைகளை காட்டிட வேண்டும்.

மேலும் உளவள ஆலோசனை தேவைப்படுபவர்கள் 1926 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உரிய உளவள ஆற்றுப்படுத்தலைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.