கோரோனா நோயால் உயிரிழப்பு 20 லட்சத்தைத் தாண்டலாம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

0

கோவிட் -19 நோய்க்கான தடுப்பூசி விநியோகிக்கப்படுவதற்கு முன்னா் உலகம் முழுவதும் அந்த நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் அவசரக் காலப் பிரிவுத் தலைவா் மைக்கேல் ரையான் தெரிவித்ததாவது:

கோரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டு வருவதில் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது.

அத்தகைய முயற்சியை மேற்கொள்ளாவிட்டால், கோரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட தீவிரமாக அதிகரிக்கும்.

கோரோனா தடுப்பூசி அறிமுகமாவதற்கு முன்னா், அந்த நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட இரு மடங்காகக்கூடும். அந்த எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடப்பதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.

கோரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணிகள் மட்டுமன்றி, அந்த நோய்த்தொற்றின் பரவல் பாதையைக் கண்டறிதல், சம்பந்தப்பட்டவா்களை தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவதல் ஆகிய பாதுகாப்பு முறைகளை உலக நாடுகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டியதும் இன்றியமையாதது ஆகும் – என்றாா்.

நேற்றுச் சனிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 3.30 கோடிப் பேருக்கு கோரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனா்.