கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான உலகத் தலைவர்கள்

0

உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கோரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சேர்ந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அவரின் துணைவியார் மெலானியா ட்ரம்பின், ஆலோசகர் ஹிக்ஸுக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் வேளையில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக 2-வது முறையாகப் போட்டியிடும் ஜனாதிபதி ட்ரம்ப் கோரோனாவில் பாதிக்கப்பட்டு இருப்பது அவரின் வெற்றியை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் பல தலைவர்கள் கோரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வரிசையில் 74 வயது ட்ரம்பும் சேர்ந்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டனில் கோரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய ஏப்ரல் – மே மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜான்ஸனும் கோரோனாவில் பாதிக்கப்பட்டார். உலகளவில் மிகப்பெரிய தலைவர் கோரோனாவில் பாதிக்கப்பட்டதும் பிரிட்டனில்தான்.

வீட்டில் தனிமையில் சில நாட்கள் இருந்த போரிஸ் ஜான்ஸன் உடல்நிலை மோசமடையவே மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கைமுறையில் ஒக்ஸிஜன் வழங்கப்பட்டது. தீவிர மருத்துவக் கண்காணிப்புக்குப் பின்னர் ஜான்ஸன் குணமடைந்தார்.

பிரேசில் ஜனாதிபதி ஜேர் போல்ஸனாரோ

தான் மட்டுமல்ல, மக்களையும் முகக்கவசம் அணியாதீர்கள் என்று முரட்டுத்தனமாகப் பரப்புரை செய்து வியக்கவைத்தவர் பிரேசில் ஜனாதிபதி போல்ஸனாரோ. மக்களை அதிகமாகக் கூட்டிவைத்து சமூக இடைவெளியின்றி பரப்புரை செய்து மருத்துவர்களால் போல்ஸனாரோ விமர்சிக்கப்பட்டார்.

கோரோனாவிலிருந்து காக்கும் என்று மருத்துவரீதியாக நிருபிக்கப்படாத ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அதிகமாகப் புகழ்ந்து அதை மக்களுக்கு போல்ஸனாரோ பரிந்துரை செய்தார். இறுதியில் போல்ஸனாரோவையும் கோரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை.

ஜூலை மாதம் கோரோனாவில் பாதிக்கப்பட்ட போல்ஸனாரோ தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து முகக்கவசம் அணியத் தொடங்கினார்.

ஹோண்டுராஸ் நாட்டு ஜனாதிபதி ஜூவன் ஓர்லாண்டே ஹெர்னான்டஸ்,

ஹோண்டுராஸ் நாட்டு ஜனாதிபதி ஜூவன் ஓர்லாண்டே ஹெர்னான்டஸ், அவரின் மனைவியும் கடந்த ஜூன் மாதம் கோரோனாவில் பாதிக்கப்பட்டனர். ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்றிய அதிகாரிகள் சிலரும் கோரோனா தொற்றுக்கு ஆளாகினர்.

ஆனால் ஜனாதிபதி ஓர்லாண்டோவோ, எம்ஏஐஇசட் சிகிச்சையை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அதாவது, மைக்ரோடாக்கின், அசித்ரோமைசின், இன்வர்மெக்டின், ஜிங்க் ஆகிய மாத்திரைகளின் கலவையான MAIZ மாத்திரைகளை ஹோண்டுராஸ் அரசு மக்களுக்குப் பரிந்துரை செய்தது. இருப்பினும் பலன் அளிக்கவில்லை. ஜனாதிபதி ஓர்லாண்டோவும் 15 நாள்கள் சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.

கவுதமாலா நாட்டின் ஜனாதிபதி அலிஜான்ட்ரோ ஜியாம்மாட்டி

கவுதமாலா நாட்டின் ஜனாதிபதி அலிஜான்ட்ரோ ஜியாம்மாட்டிக்கு கடந்த மாதம் கோரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், கோரோனா அறிகுறிகள் லேசாக இருந்ததால், வீட்டில் இருந்தவாறே அரசுப்பணிகளைக் கவனித்து சில நாட்களி்ல குணமடைந்தார்.

பொலிவியா ஜனாதிபதி ஜீன்னி அனிஸ்

பொலிவியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதி ஜீன்னி அனிஸ் கோரோனாவில் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார்.

டோமினிக் குடியரசு ஜனாதிபதி

டோமினிக் குடியரசின் புதிய ஜனாதிபதி லூயிஸ் அபிநடர் கோரோனா வைரஸால் தனது தேர்தல் பரப்புரையின் போது பாதிக்கப்பட்டார். ஆனால், தேர்தலுக்கு முன்பாக சிகிச்சையில் இருந்து குணமடைந்த அவர் ஜூலை மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய நாடான ஈரானில் பல முக்கிய அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் கோரோனாவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக மூத்த துணை ஜனாதிபதி ஈஷாக் ஜஹாங்கிரி, துணை ஜனாதிபதி மசூமெக் எப்திகர், அமைச்சரவை அமைச்சர்கள் பாதிக்கப்பட்டனர்.