கோவிட் – 19 தடுப்பு சட்டதிட்டங்களை பொலிஸார் தவறாகப் பயன்படுத்தமாட்டார்கள் – சுகாதார அமைச்சர் உத்தரவாதம்

0

தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் – 19 நோய் தடுப்பு கட்டளைச் சட்டம் தொடர்பில் புதிதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளை பொலிஸார் தவறாகப் பயன்படுத்தமாட்டார்கள் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கோவிட் – 19 நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கே பொலிஸார் இந்த சட்டத்தைப் பயன்படுத்துவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுகாதார அமைச்சர் இவற்றைத் தெரிவித்தார்.

“கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தினசரி பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்காக ஆய்வுகூடங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுகின்ற போதும், இலங்கை தொடர்ந்தும் கோவிட்-19 நோயாளர்களை மருத்துவமனைகளில் தங்க வைத்து சிகிச்சை வழங்குகின்றது.

கோரோனா எதிர்ப்பு சட்டங்கள் உள்ளடக்கிய புதிய வர்த்தமானி அறிவிப்பின் விதிமுறைகள் எந்த வகையிலும் முறைகேடு செய்யப்படாது. வர்த்தமானியில் உள்ள விதிகளை பொலிஸாரும் தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள். கோவிட் -19 நோய் பரவல் தணிப்புத் தொடர்பான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மட்டுமே பொலிஸார் கவனம் செலுத்துவார்கள்” என்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.