Sunday, May 28, 2023
Homeஉள்ளூர் செய்திகள்சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக பணம் பறிப்பு; யாழ்ப்பாணத்தில் இன்றும் ஒரு சம்பவம் பதிவு

சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக பணம் பறிப்பு; யாழ்ப்பாணத்தில் இன்றும் ஒரு சம்பவம் பதிவு

சமுர்த்தி உதவிக் கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் இரட்டிப்பாக அதிகரித்து வழங்குவதாக தெரிவித்து தனிமையில் இருந்த சிறப்புத் தேவையுடைய வயோதிபப் பெண்ணிடம் இனந்தெரியாத ஒருவரால் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி வளலாயில் இன்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர், கோப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் என தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தனிமையில் வசிக்கும் அந்தப் பெண தையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.

தங்களுக்கு தற்போது வழங்கப்படும் சமுர்த்தி உதவித் தொகையை அடுத்துவரும் மாதங்களில் அரசினால் இரட்டிப்பாக வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்காக தாம் ஒவ்வொரு சமுர்த்திப் பயனாளிகளிடமிருந்தும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை அறவிடுகிறோம் என்று தெரிவித்த அந்த நபர் நான்கு படிவங்களைக் கொடுத்து அதில் கையொப்பமிட்டு வழங்குமாறு கூறியுள்ளார்.

தன்னிடம் தற்போது அவ்வளவு தொகை பணம் இல்லை அயலிலுள்ளவர்களிடம் பெற்றுத்தான் வழங்க வேண்டும் என்று வயதான பெண் தெரிவித்துள்ளார்.

பணம் உடனடியாக வழங்காவிட்டால் எதிர்வரும் மாதங்களில் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்த அந்த நபர் வலுக்கட்டாயமாக பணத்தினை பெற்றுள்ளார்.

“வந்திருப்பவர் முகக்கவசத்தினை அணிந்தவாறு உடனடியாக பணத்தை வழங்க வேண்டும் என்று கடுந்தொனியில் தெரிவித்ததார். அதனால் எனக்கு இது மோசடி என சந்தேகம் ஏற்பட்டது. எனினும் பணத்தை வழங்காவிட்டால் எனது உயிருக்கு ஏதேனும் விபரீதம் நிகழலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

பணத்தை வழங்கிவிட்டு அலைபேசி ஊடாக அயலவர்களுக்கு தெரிவிக்கலாம் என்று முயற்சித்த போது எனது அலைபேசியும் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்தது” என்று பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அலைபேசி களவாடப்பட்டமை தொடர்பாக  தொலைபேசி இணைப்பு வழங்கிய நிறுவனத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் நீர்வேலி பகுதியிலும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றது என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பிரதேச செயலகத்திலிருந்து பதிவினை மேற்கொள்ள வருவதாக தெரிவித்து பல பண மோசடிகள் இடம் பெற்றுள்ளன.

எனவே இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular