நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் இணைப்பாளரின் நடவடிக்கைகளால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை மூலக் கிளைகள் கடும் விசனம் கொண்டுள்ளன.
வட்டுக்கோட்டைத் தொகுதியை மேற்பார்வை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தமிழ் அரசுக் கட்சியால் கொள்கையளவில் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும் பகுதி வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு வழங்கப்படும் என்பது தமிழ் அரசுக் கட்சியின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
எனினும் அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு ஒதுக்கப்படும் நிதியின் பெரும்பகுதி சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவின் ஒரு பகுதிக்கும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்கும் வழங்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு இறுதியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபா நிதியில் சுமார் ஒரு மில்லியன் மட்டுமே வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு செலவிடப்பட்டதாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிதியில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் எத்தனை வீதிகள் திருத்தப்பட்டன என்ற கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினரிடம் எழுப்ப உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
“இவ்வாறு நிதியைப் பகிரும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளரே முன்னெடுக்கிறார். அவர் ஒரு ஆசிரியர். அவரை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறக்குவது நாடாளுமன்ற உறுப்பினரின் தீர்மானமாக உள்ளது. அதனால் அவர் எதைச் செய்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் தலையாட்டுகிறார்.
ஏனைய தொகுதிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எனவே வட்டுக்கோட்டை மூலக்கிளைகளின் ஆலோசனைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கவனத்தில் எடுக்கவேண்டும். இணைப்பாளரின் தீர்மானத்துக்கு அனைத்தையும் அவர் செய்வாராயின் வாக்களித்த வட்டுக்கோட்டை மக்களுக்கு கட்சி எவ்வாறு பதிலளிப்பது?” என்று தமிழ் அரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதியின் 3 மூலக் கிளைகளைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
“எம்மால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டதற்கு அமைய வட்டுக்கோட்டை தொகுதி தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்துக்கு தொகுதியைச் சேர்ந்த ஒருவர் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு ஏனையவற்றையும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நிறைவேற்றவேண்டும்” என்றும் அவர்கள் கோரிக்கைவிடுகின்றனர்.
