சரா எம்.பியின் இணைப்பாளர் மீதான எதிர்ப்பு உச்சம் – அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள் விழாவைப் புறக்கணித்தனர் தமிழரசுக் கட்யினர்

நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் இணைப்பாளருக்கு எதிரான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி மூலக் கிளை உறுப்பினர்களின் நடவடிக்கைகள் உச்சம் பெற்றுள்ளன.

- Advertisement -

தமிழ் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 91ஆவது பிறந்த தின விழா வலிமேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றது.


வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் த.துரைலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் நினைவுரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும் இந்த நிகழ்வில் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க முடியாது எனவும் தனது சார்பில் இணைப்பாளர் பிரதாப் கலந்துகொள்வார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் , விழா ஏற்பாட்டாளர்களுக்கு நேற்று சனிக்கிழமை அறிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் இணைப்பாளர் பிரதாப் மீது ஏற்கனவே கடும் விசனம் கொண்டிருந்த தமிழ் அரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை மூலக்கிளைகளின் உறுப்பினர்கள், இன்றைய விழாவில் அவர் பங்கேற்று நினைவுரையாற்றுவதை அறிந்து விழாவைப் புறக்கணித்தனர்.

அத்துடன், வலி.மேற்கு பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் 9 பேரில் இருவர் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றனர். பிரதேச சபைத் தலைவர் நடனேந்திரன், வெளியூர் சென்றிருப்பதால் கலந்துகொள்ள முடியவில்லை எனக் கூறப்பட்ட போதும், ஏனைய 6 உறுப்பினர்களுகம் விழாவைப் புறக்கணித்திருந்தனர்.

விழாவின் ஆரம்பத்தில் கலந்துகொண்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஜெயந்தன், பிரதாப் கலந்துகொள்வதை அவதானித்து விழாவிலிருந்து வெளியேறினார் என்று கட்சியின் தகவல்கள் தெரிவித்தன.

நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் இணைப்பாளரின் நடவடிக்கைகளால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை மூலக் கிளைகள் கடும் விசனம் கொண்டுள்ளன என்று முதல்வன் பத்தி வெளியிட்டிருந்தது.

அதனை தமிழ் இணையத்தளங்கள் பல பிரதி எடுத்து வெளியிட்டிருந்தன. அதனால், தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரை, பிரதாப் தனது முகநூலின் ஊடாக தனக்கே உரித்தான மொழி நடையில் கீழ்த்தரமாக பதிவிட்டிருந்தார். தன்னை ஒரு ஆசிரியர் என்ற நிலையை மறந்து அவர் அந்தப் பதிவை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தெற்கு அரசியல்வாதிகளுடன் உள்ள நெருக்கமான உறவு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களிடம் பிரதாப் எடுத்துக் கூறியிருந்தார். அவர் சுயநினைவற்று அவற்றைத் தெரிவித்திருந்தாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அவை தேர்தல் காலத்தில் பெரும் துணையாக அமையக் கூடியவை.

இவ்வாறான ஒருவர் வட்டுக்கோட்டைத் தொகுதியை ஆள முடியுமா? என்ற எதிர்ப்பு நிலை வட்டுக்கோட்டை மூலக் கிளைகளின் உறுப்பினர்களிடம் எழுந்துள்ளன. வட்டுக்கோட்டை மூலக் கிளைகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் அடுத்த கட்டமாக பேராசிரியர் சிற்பலத்தை சந்திக்கவுள்ளனர் என அறிய முடிகிறது.

அத்துடன், இளம் உறுப்பினர்கள் பலர், வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தனின் ஏற்பாட்டில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை வரும் நாள்களில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

வட்டுக்கோட்டைத் தொகுதியைச் சேர்ந்தவரும் தொகுதியில் நிரந்தரமாக வசிப்பவருமே நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்ற நிலைப்பாடு மக்களிடையே மேலோங்கியுள்ள நிலையில் இணைப்பாளரின் விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதே தற்போதுள்ள கேள்வி.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!