சர்கார் படத்தில் நீக்கப்பட்ட 5 நொடிக் காட்சியும் ஒலி இழப்பு செய்யப்பட்ட வார்த்தைகளும்!

சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமரிசிக்கும் காட்சிகள் மறுதணிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி திரையிடப்பட்டு வருகிறது. அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், படத்தின் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமள வல்லி என்று குறிப்பிடும் காட்சி போன்றவை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சனம் செய்யும் விதமாக அமைத்திருப்பதாகவும் பெரும் சர்ச்சை உருவாகியது.

இதனால் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் வியாழக்கிழமை அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சில திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டில் வியாழக்கிழமை நள்ளிரவில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவுக்கு பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவரது பாதுகாப்புக்காகவே பொலிஸார் அவரது வீட்டில் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்பிணை கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரைக் கைது செய்ய சென்னை மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமரிசிக்கும் காட்சிகள் மறு தணிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பிற்பகல் முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லாமல் தணிக்கைச் செய்யப்பட்ட புதிய வடிவம் திரையிடப்பட்டு வருகிறது.

சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமரிசிக்கும் காட்சிகள் மறுதணிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள்:

* 7-வது ரீலில் நெருப்பில் மிக்ஸி, கிரைண்டர் ஆகிய (இலவசப்) பொருள்கள் வீசப்படும். இக்காட்சி நீக்கப்பட்டுள்ளது.

* வரலட்சுமியின் பெயர் கோமள வல்லி. இதில் கோமள என்கிற வார்த்தை ஒலி இழப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் படத்தில் கோமள வல்லி என்கிற பெயர் எங்கெங்கெல்லாம் வருகிறதோ அந்த இடத்தில் கோமள வார்த்தை ஒலி இழப்பு செய்யப்பட்டு வல்லி என்று மீதமுள்ள பெயர் மட்டுமே இடம்பெற்றிருக்கும். சப்-டைட்டிலும் கோமள என்கிற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

* 4-வது ரீலில் பொதுப்பணித்துறை என்கிற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அதேபோல 7-வது ரீலில் 56 வருடம் என்கிற வசனமும் நீக்கப்பட்டுள்ளது. சப் டைட்டிலும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நீக்கம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள புதிய தணிக்கைச் சான்றிதழில், விண்ணப்பதாரர் இந்த மாற்றங்களைத் தன்னிச்சையாகச் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here