சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் தோனி

0

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இரவு 7.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக வைத்துக்கொள்ளுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி (வயது – 39). விக்கெட் காப்பாளர், நட்சத்திர துடுப்பாட்ட வீரரான இவர், 2004ல் பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் 4 ஆயிரத்து 876 ஓட்டங்கள், 350 ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்து 773 ஓட்டங்கள், 98 சர்வதேச ‘ரி–20’ போட்டிகளில் ஆயிரத்து 617 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இந்தியாவுக்கு மூன்று வித உலகக் கிண்ண (2007ல் ‘ரி–20’, 2011ல் 50 ஓவர், 2013ல் சம்பியன்ஸ் டிராபி) வென்று தந்துள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கிண்ண அரையிறுதிக்கு பின் எவ்வித போட்டிகளிலும் விளையாடாத தோனி, விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 13வது ஐ.பி.எல்., சீசனுக்கு தயாராகும் விதமாக சென்னையில் நடக்கும் பயிற்சி முகாமில் பங்கேற்று வரும் இவர், தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு ஓய்வை அறிவித்திருந்தார். இதில், ‘‘ஆதரவு தந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி’’ என, தெரிவித்திருந்தார்.