சாதனை மேல் சாதனை: 4 நாள்களில் ரூ. 150 கோடி வசூலைத் தாண்டிய சர்கார் படம்!

விஜய் நடித்து சமீபத்தில் வெளியான சர்கார் படம் முதல் நான்கு நாள்களில் ரூ. 150 கோடிக்கும் (இந்திய ரூபா மதிப்பில்) அதிகமான வசூலை எட்டியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

சர்கார் படத்தில், தமிழக அரசின் இலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள்.

பிறகு சர்கார் படம் மறு தணிக்கை செய்யப்பட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டதால், சர்கார் படப் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இனி அதிமுகவினர் போராட்டம் எதுவும் செய்ய மாட்டார்கள். நடிகர் விஜய்க்கும், தங்களுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் கிடையாது என்றார்.

இந்நிலையில் இந்தப் படம் முதல் நான்கு நாள்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. தெறி, மெர்சல் படங்களுக்குப் பிறகு ரூ. 150 கோடியை எட்டிய மூன்றாவது விஜய் படம் என்கிற பெருமையை சர்கார் படம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் நான்கு நாள் வசூலாக ரூ. 75 கோடி கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி, கத்தி, தெறி படங்களின் வசூலை உடைத்துள்ள சர்கார், விரைவில் தமிழ்நாட்டில் மெர்சல் படத்துக்குக் கிடைத்த வசூலையும் தாண்டவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here