சாதனை வீரர் பியூஸ்லஸின் பூதவுடலுக்கு நாளை வல்வெட்டித்துறையில் அஞ்சலி; இறுதி நிகழ்வுகள் திங்களன்று மன்னாரில்

சர்வதேச கால்பந்தாட்ட சாதனை வீரரான மன்னாரைச் சேர்ந்த யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்படவுள்ளது.

வல்வெட்டித்துறை வல்வெட்டி கருணாநிதி சனசமூக நிலையத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இலங்கை கால்பந்தாட வீரரான யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ் மாலைதீவு கழகம் ஒன்றில் விளையாடி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு தொடர்பில் உரிய காரணம் கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில் பியூஸ்லஸின் பூதவுடல் நேற்றி பின்னிரவு விமானம் மூலம் இலங்கை கொண்டுவரப்பட்டு நீர்கொழும்பு மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் அவரது பூதவுடல் அஞ்சலிக்காக இன்று இரவு 10 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரை நீர்கொழும்பு – கொழும்பு முதன்மை வீதியில் அமைந்துள்ள வெஸ்டன் புலோறிஸ் மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.

நாளை அதிகாலை அவரது வாழ்விடமான வல்வெட்டித்துறைக்கு எடுத்துவரப்பட்டு நாளைக் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வல்வெட்டித்துறை வல்வெட்டி கருணாநிதி சனசமூக நிலையத்தில் வைக்கப்படவுள்ளது.

நாளை மாலை 4 மணிக்கு மன்னாருக்கு பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

சாதனை வீரர் பியூஸ்லஸுன் பூதவுடல் ஊர்வலத்தில் வடமாகாணத்தின் சகல கழகங்களின் வீரர்களும் தங்கள் கழகத்தின் ஜேசியுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கவுள்ளனர்.

அத்துடன் நாளை இரவு அவரது பிறந்த இடமான மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிழக்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

மார்ச் 7ஆம் திகதி அஞ்சலி உரைகளுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தலைமன்னார் வீதியில் உள்ள மன்னார் புனித செபஸ்தியான் தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.