சாரதி உரிமம் மற்றும் வாகனப் பதிவுக்கான ஒளிப்படங்களை பதிவு செய்யப்பட்ட போட்டோ ஸ்டுடியோக்கள் மூலம் நேரடியாக சமர்ப்பிக்க இணையவழி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் அகில இலங்கை நிபுணத்துவ ஒளிப்பட ஸ்டுடியோ உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுக்கு நடைமுறைப்படுத்தப்படும் நடைமுறைக்கு இணையான புதிய வழிமுறையை அறிமுகப்படுத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.
தற்போது, பதிவு செய்யப்பட்ட போட்டோ ஸ்டுடியோக்கள் மூலம் விண்ணப்பதாரர்களின் ஒளிப்படங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
சுமார் 7,000 ஒளிப்பட ஸ்டுடியோக்கள் தற்போது சேவையை வழங்குகின்றன.
அதன்படி இனி வரும் காலங்களில் சாரதி உரிமம் மற்றும் வாகனப் பதிவுக்கு விண்ணப்பிக்கும் போது ஒளிப்படங்களை சமர்ப்பிக்க இணையவழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.