சாவகச்சேரி மலச்சுத்திகரிப்பு நிலைய கட்டடப் பணிகளில் மோசடியா?


சாவகச்சேரி மலச்சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டதால் மலக்கழிவுகள் அகற்றலில் சாவகச்சேரி நகர சபை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

2016ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் சாவகச்சேரி நகரசபை, சுன்னாகம் மற்றும் கரவெட்டி பிரதேச சபைகளும் மலச்சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன. இம்மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் அமைப்படுகின்ற மலச்சுத்திகரிப்பு ஒப்பந்தத்தை மாவட்ட செயலகம் நேரடியாக கேள்வி கோரி ரூபா 7 கோடியே 53 லட்சத்து 23 ஆயிரத்து 600 (சுமார் 75மில்லியன்) க்கு ஒரு ஒப்பந்தகாரரிடம் வழங்கியிருந்தது.

- Advertisement -

இதில் சாவகச்சேரியில் அமைக்கப்படுகின்ற மலச்சுத்திகரிப்பு நிலையம் 2 கோடியே 42 லட்சத்து 55 ஆயிரம் (சுமார் 24 மில்லியன்) ரூபாவிற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. 2016 ஜூலை 9ஆம் திகதி இதன் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட செயலகத்தின் நேரடி கண்காணிப்பின் மூலம் அமைக்கப்பட்டு வந்தது.

கட்டுமானப் பணிகள் 50 வீதம் நிறைவடைந்த நிலையிலும் அங்கு பொருத்தப்படவிருந்த இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்ட நிலையிலும் அந்த பணிகள் திடீரென கைவிடப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி கட்டடப்பணிகள் தரமற்றதாகவும் திருப்திகரமற்றதாகவும் இருந்தன என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தத் கட்டட பணிகளின் நிலை தொடர்பாக திருப்திகரமற்றதாக உள்ளது என சாவகச்சேரி நகராட்சி மன்ற தொழில்நுட்ப உத்தியோகத்தரால் மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் சாவகச்சேரி நகராட்சி மன்றம் முன்னெடுத்து வந்த மலக்கழிவு அகற்றும் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாக சாவகச்சேரி நகராட்சி மன்ற தலைவர் திருமதி சிவமங்கை இராமநாதன் தெரிவித்ததாவது:

“ 2016ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுகின்ற பகுதியில் பெரும் குழிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் மலக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்துள்ளன. அதன்பின் மலச்சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணிகள் ஆரம்பித்ததன் பின்னர் நகராட்சி மன்றத்தால் மலக்கழிவு கொட்ட இடம் இல்லாததால் அந்தப்பணிகள் இடைநிறுத்தப்பட்டது.

இதனால் மலக்கழிவு அகற்றும் தனியார் நிறுவனங்கள் எமது பகுதியில் உள்ள மலக்கழிவுகளை அகற்றுகின்றன. இதற்கு மக்கள் அதிக பணம் வழங்கவேண்டியுள்ளது. நான் நகராட்சி மன்ற தவிசாளராகிய பின், மலச்சுத்திகரிப்பு நிலைய பணிகளை நிறைவு செய்து வழங்குமாறு மாவட்ட செயலகத்துடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

மேலும் இந்த மலச்சுத்திகரப்பு நிலையம் முழுமைப்படுத்தப்பட்டு இயங்க ஆரம்பித்தால் நகராட்சி மன்றம் வருமானத்தை பெற்றுக்கொள்வது மட்டுமின்றி 6 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பினையும் வழங்க முடியும்-என்றார்.

இவ்விடயங்கள் தொடர்பாக நகராட்சி மன்ற வரியிறுப்பாளர் ஒருவர் கூறுகையில், கடந்த இரண்டு வருடமாக நகர சபை மலக்கழிவுகளை அகற்றுகின்ற பணிகளை நிறுத்தியுள்ளது. இதனால் குடியிருப்பாளர்களாகிய நாம் மழைகாலங்களில் அதிக பாதிப்புக்ளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.

அதுமட்டுமின்றி நகராட்சி மன்றம் மலக்கழிவுகளை அகற்றுவதற்கு 6 ஆயிரம் ரூபாவை செலுத்தினோம். ஆனால் தனியார் நிறுவனங்கள் அகற்றுவதற்கு ரூபா 1 ஆயிரம் வரை செலுத்த வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.

சாவகச்சேரி மலக்கழிவு சுத்திகரிப்பு நிலைய பணிகள் நிறைவு செய்யப்பட்டு நகராட்சி மன்றத்திடம் வழங்கப்படுமா அல்லது மோசடிகள் இடம்பெற்றதா? அதன் உண்மை நிலைகளை மாவட்ட செயலகம் மக்களுக்கு பகிரங்கப்படுத்துமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

ஞானப்பிரகாசம் கிஷோர்
சாவகச்சேரி

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!