‘சியபத்த வீடமைப்பு’ திட்டத்தின் நாவற்குழி தொடர்மாடிக் குடியிருப்பு பணி ஆரம்பம்

அரசின் “சியபத்த வீடமைப்பு” எனும் கருப்பொருளில் “உங்களுக்கு ஒரு வீடு உங்கள் நகரத்தில்” என்ற திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 100 வீடுகளைக் கொண்ட குடியிருப்புத் தொகுதி நாவற்குழியில் அமைக்கப்படவுள்ளது.

அந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாளான இன்று நவம்பர் 18ஆம் திகதி இந்த வீட்டுத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாடுமுழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.உசா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி பிரதேச சபையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் தங்கவேலு, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மத தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.