2009ஆம் ஆண்டு மட்டக்களப்பு வெல்லாவெளியில் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றத்துக்கு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபில் என். எம். மொகமெட் அப்துல்லாஹ் தீர்ப்பளித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை அந்தப் பகுதியில் உள்ள சிறப்பு அதிரடிப் படை முகாமில் பணியாற்றிய 21 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வன்புணர்ந்திருந்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை மீதான விளக்கம் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபில் என். எம். மொகமெட் அப்துல்லாஹ் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.


வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனின் வழக்கை நெறிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சி, பொலிஸ் சாட்சிகள், நிபுணத்துவ சாட்சி மற்றும் எதிரி சார்பான சாட்சி நிறைவடைந்து வழக்குத் தொடுனர், எதிர் சார்பான சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி எதிரியை குற்றவாளி என்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் வழக்கு தண்டனைத் தீர்ப்புக்காக இன்று வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டது.
“குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அத்தோடு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை குற்றவாளி செலுத்தவேண்டும். தவறின் 6 மாதங்கள் சாதார சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும். அத்தோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளி ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறினால் ஒரு மாத கால சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபில் என். எம். மொகமெட் அப்துல்லாஹ், தண்டனைத் தீர்ப்பளித்தார்.