முன்னாள் இராணுவ சிப்பாய்க்கு ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதீமன்ற நீதிபதி டி. எஸ்.சூசைதாஸ் தண்டனைத் தீர்ப்பளித்தார்.
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய விளாங்குளம் எனப்படும் மகாதிவுல்வெவ பகுதியில் ஏழு வயது சிறுவனுக்கு பாலியல் துர்நடத்தை செய்த குற்றவாளிக்கே இந்தத்தண்டனை வழங்கப்பட்டது.
38 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான குற்றவாளி இராணுவத்தில் கடமையாற்றி வந்த நிலையில் விடுமுறை தினங்களுக்கு தனது வீட்டுக்கு வந்திருக்கும் சந்தர்ப்பங்களில் தனது அயல் வீட்டு சிறுவனுடன் பாசமாகப் பழகி வந்துள்ளார்.
ஏழு வயது நிரம்பிய சிறுவன், தாய் – தந்தைக்கிடையேயான பிரிவின் காரணமாக தந்தை மற்றும் அண்ணனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த குற்றவாளி தனது அலைபேசியை பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு வழங்கி வீடியோ கேம்கள், யூடியுப் வீடியோக்களை பார்ப்பதற்கும் அனுமதித்திருக்கின்றார்.
குற்றவாளியின் இத்தகைய அனுகூலங்களின் காரணமாக சிறுவன் தனக்கு ஏற்பட்ட கடும் பாலியல் சித்திரவதைகளை யாரிடம் சொல்லவில்லை.
மூன்று தடவைகள் கடுமையான பாலியல் சித்திரவதைகள் புரிந்ததாக குற்றப்பகர்வுப்பத்திரத்திலே குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்விளக்க மாநாட்டின் போது குற்றத்தை ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்திருந்தாலும் பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவரே தனக்கெதிரான மூன்று குற்றஞ்சாட்டுக்களுக்கும் குற்றவாளி என்று தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம் வழக்குத் தொடுநரான சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் தண்டனை தொடர்பான சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
“பாதிக்கப்பட்ட சிறுவனின் வயது, அவனுக்கு மலவாயில் பகுதியில் குற்றவாளியால் ஏற்படுத்தப்பட்ட காயம், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்ப சூழல், குற்றவாளியின் தொழில், நடத்தை ஆகியவற்றை கவனத்திற் கொண்டு உச்சபட்சமான தண்டனையை விதிக்குமாறு மன்றிடம் கோரினார்.
எதிரி சார்பில் தோன்றிய சட்டத்தரணி தனுஷ்க மெதகெதர குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்னைய நடத்தை, குடும்ப விபரங்களை கருத்திற் கொண்டு குறைந்த தண்டனையை ஆக்குமாறு சமர்ப்பணம் செய்தார்.
இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ், மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார். குற்றவாளி 21 ஆயிரம் ரூபா தண்டப்பணம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒரு லட்ச ரூபா நட்ட ஈடு வழங்குமாறும் தண்டனைத் தீர்ப்பளித்தார்.