ஜனாதிபதித் தேர்தலில் அரச நிதி முறைகேடு; லலித் வீரதுங்க, அனுஷ பல்பிட்ட இருவரும் விடுவித்து விடுதலை

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலராக இருந்த லலித் வீரதுங்கவையும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவையும் விடுவித்து விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 600 மில்லியன் ரூபா நிதியை முறைகேடான முறையில், தேர்தல் நலனுக்காக சில் துணிகளை விநியோகிக்கப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 2017 செப்ரெம்பரி விதித்திருந்தது.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் தமக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த மேன்முறையீட்டு மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.