ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவியேற்று தனது முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அப்போது பதில் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் இலங்கையின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
1981ஆம் ஆண்டு 2ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளையும், டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுரகுமார திஸாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றனர்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பதவி விலகல் காரணமாக வெற்றிடமான ஜனாதிபதி பதவியின் எஞ்சிய பதவிக் காலத்தை வகிக்க ரணில் விக்ரமசிங்க தகுதி பெற்றார்.
இலங்கையின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கடந்த வருடத்தில், எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகள், தினசரி திட்டமிடப்பட்ட மின்வெட்டு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதி சமாளித்தார். அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையும் தீர்க்கப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் நிதி உட்பட பல அமைச்சுக்களை வைத்திருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க மூன்றாம் காலாண்டில் எதிர்பார்க்கப்படும் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடிந்தது.
2022 ஏப்ரலில் தான் இலங்கை திவாலானதாக அறிவிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு நாடு ஒரு பெரிய மற்றும் விரைவான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
கடந்த வருடத்தில் ஜனாதிபதி அடைந்துள்ள முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு விழாக்களை ஏற்பாடு செய்ய பல தரப்புக்கள் முன்மொழிந்துள்ளன.
எவ்வாறாயினும் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வேளையில் அரச அல்லது தனியார் நிதியைப் பயன்படுத்தி எந்தவொரு நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என்று பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று அரச முறை பயணமாக இந்தியாவிற்கு பயணமாகிறார்.