ஜனாதிபதி பதவி விலகவேண்டும்; ஏனைய கட்சிகள் ஆதரவளித்தால் இடைக்கால அரசை அமைத்து மக்களுக்குத் தீர்வு – அநுரகுமார திசாநாயக்க

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கான குறுகிய கால திட்டம் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்த்து வைப்பதற்கான பிரேரணையை தேசிய மக்கள் சக்தி இன்று முன்வைத்துள்ளது.

அந்தத் தீர்மானத்தின்படி, ஜனாதிபதி முதலில் பதவி விலக வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சபாநாயகரை பதில் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும், புதிய அரசாணையுடன் ஆறு மாதங்களுக்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
நாட்டில் நிலவும் அரசியல் உறுதித்தன்மை மற்றும் அட்டூழியங்களைத் தீர்ப்பதற்கு ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்கினால் ஆறு மாத காலத்திற்கு இடைக்கால அரசை அமைத்து அதனை தீர்க்கும் பொறுப்பை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும். தற்போது பிரதமர் இல்லாத நிலையில் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும் என்பதே எமது முதன்மையான நிபந்தனை.

இடைக்கால அரசை அமைப்பதற்கு தேசிய மக்கள் சத்திக்கு ஆதரவளிக்க ஏனைய கட்சிகள் தயாராக இல்லை என்றால், இடைக்கால அரசில் அங்கம் வகிக்காமல் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்.

நாடாளுமன்றத்தில் எங்களுக்கு மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எவ்வாறாயினும், இந்த அரசியல் உறுதியற்ற தன்மையை சமாளித்து நாட்டில் அரசியல் உறுதித்தன்மையை நிலைநாட்டும் வரையில் குறைந்தது ஆறு மாதங்களுக்கு இடைக்கால அரசை அமைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

மக்களின் விருப்பத்துடன் புதிய அரசை அமைப்பதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் – என்றார்.